கொள்ளைக்காரன் சிலையை திறக்க முதல்வருக்கு அழைப்பு. உ.பி.யில் பரபரப்பு
உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அமைந்துள்ள சம்பல் பள்ளத்தாக்கு பகுதியில் பூலான் தேவிக்கு முன்பே கொள்ளையராக இருந்தவர் தத்துவா என்கிற சிவக்குமார் படேல். மேற்கண்ட மூன்று மாநிலங்களில் இவர் மீது 300-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளது. சந்தனக்கடத்தல் வீரப்பனுக்கு இணையாக இவரது புகைப்படத்தை கூட பல ஆண்டுகளாக போலீசாரால் கண்டுபிடிக்க முடியவிலை. சம்பல் பகுதியின் வீரப்பன் என்று அழைக்கப்பட்ட தத்துவா போலீஸார்களின் பல ஆண்டுகள் முயற்சிக்கு பின்னர் கடந்த 2007-ம் ஆண்டு, ஜூலை 21-ம் தேதி, சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்நிலையில் கொள்ளைக்காரர் தத்துவாவின் மகன் வீர்சிங் படேல் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். வீர்சிங் படேல் தற்போது தனது சொந்த ஊரில் தனது தந்தைக்கு சிலை வைக்க முடிவு செய்துள்ளார். இவரது முடிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்து வெளிவந்து கொண்டிருக்கின்றது.
தத்துவாவுக்கு சிலை வைக்க பதேபூர் மாவட்ட கலெக்டர் அனுமதி தர மறுத்துவிட்டார். கொள்ளையர்களை வணங்குவது தவறான முன் னுதாரணம் ஆகிவிடும் என்று கூறி கலெக்டர் மறுத்துவிட்டாலும் கலெக்டரின் எதிர்ப்பையும் மீறி தத்துவாவுக்கு சிலை வைக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் வீர்சிங் படேல் கூறும்போது, “தந்தையை வணங்குவது ஒவ்வொரு மகனின் உரிமை. மேலும் இப்பகுதி மக்களுக்கு எனது தந்தை பல்வேறு வகையிலும் உதவியவர் என்பதால் அவர்களும் சிலை வைக்க விரும்புகின்றனர். எனவே என் தந்தைக்கு நான் சிலை வைப்பதை யாராலும் தடுக்க முடி யாது. திறப்பு விழாவுக்கு முதல்வர் அகிலேஷ் யாதவ், சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆகியோரையும் அழைக்க உள்ளேன்” என்று கூறியுள்ளார்.
சுமார் 30 ஆண்டுகள் போலீசாரால் தேடப்பட்டு தத்துவாவை பிடிக்க உ.பி. அரசு சுமார் ரூ.64 கோடி செலவு செய்ததாக கூறப்படும் கொள்ளைக்காரனின் சிலையை ஒரு மாநில முதல்வரே திறப்பாரா? என்பது குறித்த விவாதம் தற்போது உ.பியில் நடைபெற்று வருகிறது.