மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி மீது தேச துரோக வழக்கு. நீதிபதி அதிரடியால் பரபரப்பு
தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய சட்டம் தொடர்பாக சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை விமர்சித்து கருத்து தெரிவித்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய உ.பி. மாநில நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய சட்டம் செல்லாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பு குறித்து சமீபத்தில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து கூறிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ”சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு தவறான தர்க்கத்தின் அடிப்படையில் உள்ளது. தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பலவீனப்படுத்தப்படுகிறபோது ஜனநாயகத்துக்கு அது ஆபத்தாக முடியும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
நீதித்துறை குறித்தும் தீர்ப்பு குறித்தும் அருண் ஜெட்லி கூறிய கருத்து பற்றி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா கூறும்போது, ”சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்து அருண் ஜெட்லி தெரிவித்த கருத்து துரதிருஷ்டவசமானது, கண்டனத்துக்குரியது. மூத்த வழக்கறிஞராக உள்ள அருண் ஜெட்லி, நீதித்துறைக்கு எதிராக கருத்து வெளியிட்டது மிகவும் தவறான செயலாகும். இது இந்திய ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானது அல்ல. நீதித்துறையை விமர்சிப்பதை விட்டு விட்டு நாட்டின் முக்கிய துறையை கையில் வைத்திருக்கும் அவர், தன்னுடைய பொறுப்பை உணர்ந்து பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறினார்.
இந்நிலையில், நாளிதழ்களில் வெளியான செய்திகளை அடிப்படையாக கொண்டு, உத்தரபிரதேச மாநிலம் குல்பகார் சிவில் நீதிபதி அங்கிட் கோயல் என்பவர் தானாகவே முன்வந்து, அருண் ஜெட்லி மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு நேற்று உத்தரவிட்டுள்ளார். மேலும், நவம்பர் 19ஆம் தேதி நேரில் அருண் ஜெட்லி நேரில் ஆஜராக வேண்டும் என்றும் அவர் சம்மன் அனுப்பி உள்ளார். மத்திய நிதி அமைச்சருக்கே சம்மன் அனுப்பப்பட்டுள்ளதால் மத்திய அரசு வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.