காட்டிக் கொடுத்தால் ரூ.15 லட்சம் பரிசு. போலீஸ் பாணியில் களமிறங்கிய வருமான வரித்துறை
குற்றவாளிகளை கண்டுபிடிக்க துப்பு கொடுத்தால் பரிசு என காவல்துறையினர் அவ்வப்போது அறிவிப்பு கொடுப்பதுபோல வரி ஏய்ப்போர்களை காட்டி கொடுத்தால் ரூ.15 லட்சம் பரிசு வழங்கப்படும் என வருமானவரித்துறை அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்படும். இதன் காரணமான தொழிலதிபர்களின் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் காட்டி கொடுக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
வருமான வரித் துறையின் மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) சில புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. இவற்றை நாடு முழுவதும் உள்ள அனைத்து வருமான வரி அலுவலகங்களுக்கும் கடந்த வாரம் அனுப்பி வைத்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
அரசுக்கு செலுத்த வேண்டிய டிடிஎஸ் மற்றும் தனி நபர் வருமான வரி ஆகியவற்றை செலுத்தாமல் இருப்பவர்கள் மற்றும் முறையாக கணக்கை தாக்கல் செய்யாதவர்கள் பற்றி நம்பகமான தகவல் தருபவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.
குறிப்பிட்ட நபர் தரும் தகவல் மூலம் வசூலாகும் வரித் தொகையில் 10 சதவீதம் தகவல் தந்த நபருக்கு பரிசாக வழங்கப்படும். அதேநேரம் இந்த பரிசுத் தொகைக்கான உச்சவரம்பு ரூ.15 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வரி ஏய்ப்பு செய்பவர்கள் குறித்து தகவல் தருபவர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படும். அவர்கள் தரும் தகவல்கள் மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரம் சட்ட ரீதியாக தேவை ஏற்பட்டால் இதற்கு விதிவிலக்கு உண்டு. மேலும் போதுமான ஆதாரமின்றி, ஊகத்தின் பேரில் தரப்படும் தகவல்கள் பரிசீலிக்கப்படமாட்டாது.
இந்த புதிய விதிமுறைகள் கடந்த நிதியாண்டுக்கும் நடப்பு நிதியாண்டுக்கும் பொருந்தும் என அதில் கூறப்பட்டுள்ளது.