ஷாருக்கானிடம் மன்னிப்பு கேட்ட இந்தியாவுக்கான அமெரிக்க தலைமை தூதர்
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள அமெரிக்காவில் உள்ள நியூஜெர்ஸி நகருக்கு சென்றார். நியூஜெர்ஸி விமான நிலையத்தில் அவர் குடியுரிமை அதிகாரிகளால் காக்க வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை ஷாருக்கான் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.
ஒரு நாட்டிற்கு பாதுகாப்பு என்பது அவசியம்தான். இந்த பாதுகாப்பு நடைமுறையை நான் பெரிதும் மதிக்கின்றேன். ஆனால் ஒவ்வொரு முறையும் அமெரிக்கா வரும்போது காக்க வைக்கப்படுவது வேதனைப்படுத்துகிறது என்று கூறியுள்ள ஷாருக்கான், இருப்பினும் இந்த காத்திருந்த நேரத்தில் சில போக்கிமோன்களை பிடிக்க முடிந்தது’ என கிண்டலுடன் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் ஷாருக்கான் கடந்த 2009 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் அமெரிக்கா சென்றிருந்தபோதும் குடியுரிமை அதிகாரிகளால் காக்க வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கம்ப்யூட்டர்களில் ஷாருக் கான் என்ற பெயருக்கு பக்கத்தில் அபாய எச்சரிக்கை காணப்பட்டதால் அவரை துருவித்துருவி விசாரித்த அதிகாரிகள் விசாரணை செய்ததாகவும், பின்னர் இவர் வேறு ஷாருக்கான் என்று தெரிந்த பின்னர் நாட்டுக்குள் நுழைய அனுமதி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்கா சென்ற ஷாருக்கானுக்கு நேர்ந்த இக்கட்டான நிலைக்கு தான் வருந்துவதாகவும் இதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டு கொள்வதாகவும் இந்தியாவுக்கான அமெரிக்க தலைமை தூதர் ரிச்சர்ட் வர்மா கூறியுள்ளார்.