செக்ஸ் புகார் எதிரொலி: அமெரிக்க அட்டர்னி ஜெனரல் ராஜினாமா
அமெரிக்காவின் முக்கிய நகரமான நியூயார்க் நகர மாகாண அட்டார்னி ஜெனரலாக பணியாற்றி வந்த எரிக் சினைடர்மேன் என்பவர் நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர் மீது 4 பெண்கள் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ள நிலையில் இதுகுறித்து ‘தி நியூயார்க்கர்’ என்ற ஊடகத்தில் செய்தி வெளியானதால் இவர் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.
அட்டர்னி ஜெனரல் எரிக் குடிபோதையில் தங்கள் மீது பாலியல் ரீதியில் தாக்குதல் நடத்தியதாக இரண்டு பெண்கள் பகிரங்கமாக குற்றஞ்சாட்டினர். இதனால் இவர் பதவி விலக வேண்டும் என்று நியூயார்க் மாகாண கவர்னர் ஆணட்ரூ கியூமோ உத்தரவிட்டதை அடுத்துவேறு வழியில்லாமல் எரிக் சினைடர்மேன் அட்டார்னி ஜெனரல் பதவியை ராஜினாமா செய்தார்.
தன்மீது எழுந்த பாலியல் குற்றச்சாட்டுள் குறித்து அவர் கூறியதாவது: ;கடந்த சில மணி நேரத்தில் என் மீது தீவிரமான குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன. எனக்கு எதிராக கூறப்பட்டு உள்ள அந்த குற்றச்சாட்டுகளை நான் மறுக்கிறேன். இந்த குற்றச்சாட்டுகள் என் பணி நடத்தையுடன் தொடர்பு இல்லாதது, இருப்பினும் என்னை பணி செய்வதில் இருந்து இந்த நெருக்கடியான நேரத்தில் தடுக்கின்றனர். எனவே நான் பதவி விலகுகிறேன். நான் யார் மீதும் பாலியல் ரீதியில் தாக்குதல் தொடுத்தது கிடையாது. சம்மதம் இல்லாமல் யாருடனும் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.