அமெரிக்காவின் அதிரடி முடிவால் இலங்கை போர்க்குற்ற விசாரணையில் திடீர் திருப்பம்.
இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் நடைபெற்ற இறுதிகட்ட போரில் இலங்கை ராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்க்களை அடுத்து இதுகுறித்து சர்வதேச அளவிலான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா சார்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் மூன்று முறை தீர்மானம் கொண்டு வந்தது.
இந்நிலையில் இலங்கையில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் காரணமாக இலங்கை அரசுடன் நல்லுறைவை பேணும் வகையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு ஆதரவாக தீர்மானம் கொண்டு வரப்படும் என அமெரிக்கா திடீரென அறிவித்துள்ளது. இந்த திடீர் திருப்பத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது சுற்றுப்பயணம் செய்து வரும் அமெரிக்காவின் மத்திய, தெற்காசிய விவகாரங்கள் துறை துணை அமைச்சர் நிஷா பிஸ்வால், தலைநகர் கொழும்பில் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியபோது, ”ஜெனீவாவில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் கூட்டமைப்பின் மாநாட்டில் இலங்கை விவகாரம் தொடர்பாக தீர்மானம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை அரசுடனான நல்லுறவைப் பேணும் வகையில் இந்த தீர்மானம் அமையும். இலங்கையில் தற்போதைய சூழலில், வேற்றுமைகளை அகற்றி சமரசம் மலர ஏராளமான வாய்ப்புகள் உருவாகி இருப்பதை அமெரிக்கா உணர்ந்துள்ளது. அந்த வகையிலேயே, இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவர அமெரிக்கா முடிவெடுத்துள்ளது” என்று கூறியுள்ளார்.