பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை அமெரிக்க நிறுவனங்கள் பயன்படுத்த வேண்டும். அமைச்சர் வேண்டுகோள்
அமெரிக்காவில் இயங்கி வரும் தொழில்நுட்ப நிறுவனங்கள்’ பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தைப் பயன்படுத்தி வளர்ச்சி அடைய வேண்டும் என மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் நகரில் அமெரிக்க-இந்திய வர்த்தகக் கவுன்சில் கூட்டம் கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூகுள், ஃபேஸ்புக், மாஸ்டர்கார்டு உள்ளிட்ட நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதில், அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசியதாவது:
இந்தியா, டிஜிட்டல் புரட்சியின் தொடக்கத்தில் உள்ளது. இந்தியாவில் பெரு நகரமாக இருந்தாலும், சிறிய நகரமாக இருந்தாலும், உள்நாட்டு மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மட்டுமன்றி, சர்வதேச பொருளாதரத்தை ஊக்குவிப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இந்திய அரசு, வெளிப்படையான, நியாயமான வகையில் கொள்கை முடிவுகளை எடுத்து வருகிறது. எனவே, இந்தியாவின் “டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தை தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அமெரிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன் என்றார் ரவிசங்கர் பிரசாத்.
அதையடுத்து, அமெரிக்க-இந்திய வர்த்தகக் கவுன்சில் தலைவர் முகேஷ் அகி பேசியதாவது: அமெரிக்கவாழ் இந்தியர்களை ஒன்றிணைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி எடுத்துக் கொண்ட முயற்சி, இந்திய, அமெரிக்க நிறுவனங்கள் ஒன்றிணைவதற்கான வாய்ப்பாக அமைந்துவிட்டது. இந்தியாவில் இன்னமும் 85 சதவீதம் பேர் இணையதள வசதியைப் பெறவில்லை. எனவே, அனைவருக்கும் இணையதளச் சேவை கிடைக்க வேண்டும் எனில், செல்லிடப்பேசி கோபுரங்களை அமைப்பதற்கு இந்தியாவில் தகவல், தொழில்நுட்பத் துறையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்றார் அவர்.