துருக்கியில் தீவிரவாதிகள் தொடர் தாக்குதல். அமெரிக்க தூதரகம் மூடப்பட்டது.
துருக்கி நாட்டில் தீவிரவாதிகள் அமெரிக்க தூதரகம் உட்பட 3 இடங்களில் நேற்று அதிரடி தொடர் தாக்குதல்களை நடத்தியதால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
துருக்கியில் சிறுபான்மையினராக உள்ள குர்து இன மக்கள் கடந்த சில வருடங்களாக தனி நாடு கோரி வருகின்றனர். இதை வலியுறுத்தி பல்வேறு குர்து தீவிரவாத குழுக்களும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. சமீபத்தில் இராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்திய துருக்கி போர் விமானங்கள் அங்குள்ள குர்து இன மக்கள் மீதும் குண்டுகளை வீசியதாகக் கூறப்படுகிறது. இந்த தாகுதலுக்கு பழிவாங்கும் வகையில் துருக்கியில் செயல்படும் குர்து தீவிரவாத அமைப்பு இஸ்தான்புல், சிர்நாக் பகுதிகளில் நேற்று அமெரிக்க தூதரகம் உள்பட மூன்று இடங்களில் தொடர் தாக்குதல்களை நடத்தியது.
இஸ்தான்புல் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறி வைத்து இரண்டு தீவிரவாதிகள் நேற்று அதிகாலை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு கையெறி குண்டுகளை வீசினர். போலீஸார் பதில் தாக்குதல் நடத்தியபோது இருவரும் தப்பியோடி விட்டனர். இதில் ஒரு பெண் தீவிரவாதி மட்டும் பிடிபட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து அமெரிக்க தூதரகம் மூடப்பட்டுள்ளது.
இஸ்தான்புல் புறநகர் பகுதியில் உள்ள போலீஸ் நிலையம் முன்பும் நேற்று அதிகாலை சக்திவாய்ந்த கார் குண்டு வெடித்தது. இதில் ஒரு போலீஸ் அதிகாரி உயிரிழந்தார். 3 போலீஸார் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். போலீஸார் தேடுதல் வேட்டையின்போது அங்கு பதுங்கியிருந்த இரண்டு தீவிர வாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டனர்.