சோனியா காந்திக்கு எதிரான வழக்கு தள்ளுபடி. அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு
கடந்த 1984ஆம் ஆண்டு இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டபோது, இந்தியாவில் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரம் தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒன்றை, அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்திரா காந்தி படுகொலையின்போது நாடு முழுவதிலும் குறிப்பாக டெல்லியில் சீக்கியர்கள் பலர் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் நடைபெற்ற கட்டுக்கடங்காத வன்முறையில் 3,325 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். அதுமட்டுமின்றி சீக்கியர்களுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. இந்த கலவரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலருக்கு தொடர்பு இருப்பதாக சீக்கியர்கள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் அமெரிக்காவில் வாழ்ந்து வரும் இரண்டு சீக்கியர்கள், அமெரிக்காவின் நியூயார்க் புரூக்ளின் நீதிமன்றத்தில் சோனியா காந்தி மீது கடந்த 2014-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். கடந்த 1984ஆம் ஆண்டு நடந்த கலவரத்தில் தொடர்புடைய கட்சித் தலைவர்களை காங்கிரஸ் தலைவராக உள்ள சோனியா காந்தி பாதுகாத்து வருவதாகவும், கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் தங்கள் மனுவில் கோரியிருந்தனர்.
இந்த மனு மீது விசாரணை நடத்திய மாவட்ட நீதிபதி பிரெய்ன் கோகன், மனுவை தள்ளுபடி செய்தார். அப்போது இந்த வழக்கு அமெரிக்க சட்ட வரம்புக்குள் வராததால் அதனை தள்ளுபடி செய்வதாக நீதிபதி குறிப்பிட்டார்.
இதையடுத்து, மேல்முறையீடுகளுக்கான அமெரிக்க நீதிமன்றத்தில் சீக்கியர் அமைப்பு மேல்முறையீடு செய்தது. இதில் சோனியாவுக்கு எதிரான மனுவை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தீர்ப்பை நீதிபதிகள் உறுதி செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு தகுதியுடையது அல்ல எனக் கூறி, மனுவை நிராகரித்தனர். வழக்கில் தொடர்புடைய அனைத்துமே அமெரிக்காவுக்கு வெளியே நடந்திருப்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் சுட்டிக்காட்டினர்.
இந்த வழக்கில் சோனியா காந்தி தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் ரவி பத்ரா அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியபோது, “நீதிகளின் இந்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது. சோனியாவை தவறுகளற்றவர் எனக் கூறியிருப்பதன் மூலம் தேசத்தின் இறையாண்மையைக் காத்துள்ளனர்” என்றார்.