ஐ.நாவில் அமெரிக்கா கொண்டுவர இருந்த வரைவு தீர்மான கலந்தாய்வு திடீர் ரத்து
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் கடந்த 2010ஆம் ஆண்டு நடந்த இறுதிப்போரில் மனித உரிமை மீறல், போர்க்குற்றங்கள் ஆகியவை நடந்தது தொடர்பாக, அமெரிக்கா கொண்டு வந்த வரைவு தீர்மானம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த வரைவு தீர்மானத்தில் கொண்டு வந்த ஒரு சிறு திருத்தத்தை இலங்கை அரசு ஏற்றுக்கொண்டதால் இந்த கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இலங்கை போரின்போது நடந்த குற்றங்கள் குறித்து சர்வதேச நீதிபதிகள் அடங்கிய விசாரணை அமைப்பை இலங்கை அரசே உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய வரைவு தீர்மானம் ஒன்றை அமெரிக்கா கொண்டு வந்த நிலையில் இந்த தீர்மானத்திற்கு இலங்கையின் ஆதரவு நாடுகளான பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, கியூபா போன்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த வரைவு தீர்மானத்தில் சர்வதேச நீதிபதிகள் அடங்கிய விசாரணை அமைப்பு என்பதற்கு பதிலாக காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகள் அடங்கிய விசாரணை அமைப்பு என்ற திருத்தத்தை அமெரிக்கா செய்துள்ளது.
இதன்படி, இலங்கை போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச நீதிபதிகளுக்கு பதிலாக காமன்வெல்த் நீதிபதிகள் அடங்கிய அமைப்பு விசாரணை செய்யும்
இதனையடுத்து, இன்று நடைபெறுவதாக இருந்த இலங்கை போர்க்குற்றம் தொடர்பான அமெரிக்க வரைவு தீர்மானம் தொடர்பான கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், வரும் 30ஆம் தேதி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் பொது விவாதம் இதுகுறித்த பொதுவிவாதம் மட்டுமே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த திருத்தத்திற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன.