ஆண்களின் பாலின எழுச்சி நிலையை தூண்ட ‘வயாகரா’ என்னும் மாத்திரையை தயாரித்தது போல், தாம்பத்திய சுகத்தையே வெறுக்கக்கூடிய குறைபாடு (Hypoactive Sexual Desire Disorder) கொண்ட பெண்களுக்கும் இல்லற வாழ்வில் ஊக்கத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய மாத்திரையை தயாரிக்க அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள மருந்து நிறுவனம் ஒன்று பெண்களின் பாலின எழுச்சி நிலையை தூண்டும் வகையில் மாத்திரை தயாரிக்க அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்திருந்தது. இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த அமெரிக்க அரசு தற்போது இந்த மருந்து நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே இதே காரணத்திற்காக பெண்கள் உபயோகப்படுத்தும் வகையில் பிலிபாசெரின் (Flibanserin) என்னும் மாத்திரைகள் ஒருசில வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றது. ஆனால் இந்த மாத்திரைகள் மாதவிடாய் தொடர்பான கோளாறுகள் மற்றும் வேறுசில குறைபாடுகளுக்கு மட்டுமே நிவாரணம் அளித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மனரீதியான கோளாறுகள் மற்றும் மூப்பு சார்ந்த நோய் அறிகுறிகளால் தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வம் குறைந்து காணப்படும் பெண்களின் இச்சையை தூண்டி அவர்களை மனமகிழ்வான வாழ்க்கையை நோக்கி அடியெடுத்து வைக்க உதவும் புதிய மருந்தினை தயாரிக்க அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.