அமெரிக்க அதிபர் ஒபாமா இந்திய குடியரசு தினத்தில் இந்தியாவுக்கு வந்திருந்தபோது அவரை பிரதமர் மோடி சந்தித்தபோது மிகவும் ஆடம்பரமான ரூ.10 லட்சம் செலவில் ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்ட சூட் அணிந்திருந்ததாக சமூக வலைத் தளங்களில் வெளியாகியுள்ள செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேக் இன் இந்தியா’ என்ற தாரக மந்திரத்துடன் வலம் வரும் மோடி, இங்கிலாந்தில் தயாரித்த பிரத்யேக சூட் அணிந்திருந்தார் என்ரு செய்திகள் கூறுகின்றன.
மோடி அணிந்திருந்த ‘கோட்’டில் தங்க நிறத்தில் கோடு, கோடு போல செய்யப்பட்ட டிசைனில்” நரேந்திர தாமோதர்தாஸ் மோடி’’ எனும் மோடியின் முழுப் பெயர் வடிவமைக்கப்பட்டிருந்தது.
ஆனால் ஒபாமா வந்த தினத்தன்று இது பற்றி யாருக்கும் தெரியவில்லை. மறுநாள் பத்திரிகைகளில் மோடியின் கோட் வாசகம் பெரிதுபடுத்தி காட்டப்பட்ட போதுதான் பிரதமர் மோடிக்காகவே பிரத்யேகமாக அந்த உடை தயாரிக்கப்பட்டது என்ற தகவல் தெரிய வந்தது. அந்த உடையின் விலை ரூ.10 லட்சம் வரை இருக்கலாம் என்று கருதப்படுகிறாது.
இங்கிலாந்தில் உள்ள ஷெர்ரி, ஹாலந்து ஆகிய இரண்டு நிறுவனங்கள் மோடிக்காகவே ஸ்பெஷலாக அந்த கோட்– சூட் தயாரிப்புக்கான துணி இழைகளை கொடுத்து இருக்கலாம் என்று தெரிகிறது.
அவர் அணிந்திருந்த கோட்’டின் துணி மட்டுமே ரூ.3 லட்சம் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பிரபல தையல் கலைஞர் டாம் ஜேம்ஸ் இந்த உடையை வடிவமைத்து தைத்து இருப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அவர் சிறப்பு உடை தைக்க ரூ.5 லட்சத்துக்கு மேல் வாங்குவார்.
இதன் அடிப்படையில் பார்த்தால் பிரதமர் மோடிக்காக தைக்கப்பட்ட கோட்–சூட் விலை குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் வரை இருக்கலாம் என்று இங்கிலாந்தில் வெளியாகும் ‘‘லண்டன் ஸ்டாண் டர்டு’’ இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரபல தையல் கலைஞர் டாம் ஜேம்ஸ் இதுபற்றி கூறுகையில், ‘‘இது போன்ற ஆடைகளை எங்களால் மட்டுமே வடிவமைக்க முடியும்’’ என்றார். ஆனால் துணி இழைகளை வழங்கிய லண்டன் நிறுவனங்கள் இந்த தகவலை உறுதிபடுத்த மறுத்து விட்டன.