இந்திய பெண்ணின் மரணத்திற்காக அரை கம்பத்தில் பறந்த அமெரிக்க தேசிய கொடி
அமெரிக்காவில் பணியின் உயிரிழந்த ஒரு பெண் அரசு ஊழியருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அமெரிக்காவின் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டது. இந்த பெண் அரசு ஊழியர் ஒரு இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ஹினா பட்டேல் என்ற பெண் நியூ ஜெர்சி மாநிலத்தில் மருத்துவம் சார்ந்த படிப்பை முடித்துவிட்டு, அவசரகால சிகிச்சை பிரிவில் பணியாற்றி வந்தார். கடந்த 25ஆம் தேதி ஒரு நோயாளிடம் இருந்து வந்த அவசர அழைப்பை அடுத்து, அவர் ஒரு ஆம்புலன்சில் ஏறி சிகிச்சை அளிக்க சென்றார். அப்போது எதிரே வந்த கார் எதிர்பாராத விதமாக மோதியதன் காரணமாக ஏற்பட்ட விபத்தில் சிக்கி ஹினா பட்டேல் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கும், கடமை உணர்வுக்கும் கவுரவம் சேர்க்கும் வகையில் நியூ ஜெர்சி மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் இருக்கும் தேசியக் கொடிகள் அனைத்தையும் அரைக் கம்பத்தில் பறக்க விடும்படி அம்மாநில கவர்னர் கிறிஸ் கிறிஸ்டி உத்தரவிட்டார்.
இதையடுத்து, இங்குள்ள அனைத்து தேசியக் கொடிகளும் நேற்று அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டன. இந்திய பெண் ஒருவருக்கு கவுரவம் செலுத்தும் வகையில் அந்நாட்டு தேசியக் கொடி அரை கம்பத்தில் பறந்த சம்பவம் இங்குள்ள இந்தியர்கள் அனைவருக்கும் கண்ணியம் சேர்க்கும் விதமாக அமைந்திருந்தது.