எப்-16 விமானத்துக்கு மானியம் கட். அமெரிக்கா அதிரடியால் பாகிஸ்தான் அதிர்ச்சி
சமீபத்தில் எப்16 ரக விமானங்களை பாகிஸ்தானுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்பந்தம் செய்தது. தீவிரவாதிகளுக்கு எதிராக மட்டுமே இந்த விமானங்களை பயன்படுத்துவோம் என்று பாகிஸ்தான் கூறியிருந்தாலும் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் பாகிஸ்தான் இந்த விமானங்களை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் இதன் காரணமாக பாகிஸ்தானுக்கு இந்த விமானத்தை விற்பனை செய்ய வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்தனர் குறைந்தபட்சம் இந்த விமானங்களை மானிய விலையில் வழங்க வேண்டாம் என்றும் செனட் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி சமீபத்தில் செய்தியாளர்களிடம் கூறியபோது, “பாகிஸ்தானுக்கு போர் விமானங்களை வழங்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. எனினும், அவற்றை மானிய விலையில் வழங்க பெரும்பாலான உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே, போர் விமானங்களுக்கான முழு தொகையையும் செலுத்தி பெற்றுக் கொள்ளுமாறு பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவித்துள்ளதாக கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் முழு தொகையையும் கொடுத்து போர் விமானங்களை வாங்கப் போவதில்லை என்றும், எப் 16 போர் விமானங்களை அமெரிக்கா மானிய விலையில் வழங்காவிட்டால், பாகிஸ்தான்-சீனா கூட்டு தயாரிப்பான ஜேஎப்-17 தண்டர் போர் விமானங்களை தீவிரவாதத்துக்கு எதிரான போரில் பயன்படுத்தவுள்ளதாகவும் கூறியுள்ளது.
முன்னதாக அமெரிக்காவிலிருந்து 8 எப் 16 ரகபோர் விமானங்களை வாங்க பாகிஸ்தான் ரூ.4,650 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி சுமார் ரூ.2,850 கோடியை மானியமாக வழங்க அமெரிக்கா ஒப்புக்கொண்டது. அதாவது பாகிஸ்தான் ரூ.1,800 கோடி செலுத்தினால் போதும் என்று இருந்தது. ஆனால் தற்போது முழு தொகையையும் செலுத்த அமெரிக்க வலியுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.