காஷ்மீர் பிரச்சனையில் தலையிட முடியாது. நவாஸ் ஷெரீப்பிடம் ஒபாமா திட்டவட்டம்
காஷ்மீர் பிரச்சனையை தீர்க்கவும், மத்தியஸ்தம் செய்யவும் சரியான நாடு அமெரிக்காதா என்றும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியிருந்த நிலையில் அவருக்கு பதிலளிக்கும் விதமாக இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் இணைந்து கேட்டால் மட்டுமே அமெரிக்கா காஷ்மீர் பிரச்சனையில் தலையிடும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா திட்டவட்டமாக கூறியுள்ளதால் பாகிஸ்தான் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. மேலும் ‘முதலில் பாகிஸ்தானில் உள்ள எல்லா தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராகவும் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுங்கள் என நவாஸ் ஷெரீப்புக்கு ஒபாமா பதிலடி கொடுத்துள்ளதால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்துள்ளது.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் சுமார் 90 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு இரு நாடுகள் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. இதுகுறித்து அதிபரின் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்புத் துறை துணை செயலர் எரிக் சுல்ட்ஸ் கூறியதாவது: ‘பாகிஸ்தானில் உள்ள எல்லா தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராகவும் பாரபட்சமற்ற முறையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் ஷெரீப்பிடம் அதிபர் ஒபாமா தெளிவாக எடுத்துரைத்தார். அப்போது ஐ.நா. பட்டியலிட்டுள்ள தீவிரவாதிகள், தீவிரவாத இயக்கங்கள், அவர்களுடன் தொடர்புடையவர்கள் மீது பாகிஸ்தான் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அதிபரிடம் நவாஸ் எடுத்துரைத்தார்’என்று கூறியுள்ளார்.
இதனிடையே வெள்ளை மாளிகை நிர்வாக அதிகாரி, இந்திய செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மேலும், இந்தியா – பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்சினையில் அமெரிக்கா தலையிட வேண்டும் என்று அதிபர் ஒபாமாவிடம் நவாஸ் கேட்டுக் கொண்டார். ஆனால், இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினையில் அமெரிக்கா தலையிடாது. இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட இரு நாடுகளும் விருப்பத்துடன் கேட்டுக் கொண்டால் மட்டுமே அமெரிக்கா தலையிடும் என்று ஷெரீப்பிடம் கூறியிருக்கிறோம். இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பிரச்சினைகளில் தலையிடுவதில்லை என்ற அமெரிக்காவின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. மேலும், இந்தியா – பாகிஸ்தான் இடையே பிரச்சினைகளை தீர்த்து கொள்ள இருதரப்பும் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவதுதான் சிறந்த வழி’ என்று கூறியுள்ளார்.
English Summary: US-Pakistan joint statement calls for dialogue including on Kashmir, says terrorism is mutual concern between India and Pakistan.