எப்-16 விமானங்களை அடுத்து நிதி அளிக்கவும் அமெரிக்கா மறுப்பு. பாகிஸ்தான் அதிர்ச்சி
பாகிஸ்தானுக்கு 450 மில்லியன் டாலர் அதாவது சுமார் ரூ.2 ஆயிரத்து 970 கோடி நிதி அளிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டிருந்தது, ஆனால் இந்த நிதியை வழங்க அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து தற்போது இந்த நிதியை வழங்கப்போவது இல்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் இயங்கி வரும் ஹக்கானி வலைச்சமூக தீவிரவாதிகளை, அந்நாட்டு அரசு ஏற்கனவே அளித்த வாக்குறுதிப்படி ஒடுக்கவில்லை என்று அமெரிக்கா கருதுவதன் காரணமாகவே அந்நாட்டுக்கு இந்த நிதியை வழங்கக்கூடாது என அமெரிக்க செனட் உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு இந்த நிதியை வழங்க தடை விதிக்க வகை செய்யும் மசோதாவுக்கு அமெரிக்க பாராளுமன்ற குழு (ராணுவ சேவை குழு) ஒப்புதல் வழங்கி உள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எட்டு ‘எப்-16’ ரக போர் விமானங்கள் வழங்கும் பிரச்சினையில், அமெரிக்க எம்.பி.க்கள் ஆட்சேபத்தால் முட்டுக்கட்டை போடப்பட்டுள்ள நிலையில் தற்போது தங்களுக்கு கிடைக்க வேண்டிய 450 மில்லியன் டாலரை வழங்கவும் அமெரிக்காவில் எதிர்ப்பு எழுந்திருப்பது பாகிஸ்தானை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
இந்தியாவின் வற்புறுத்தல் காரணமாக அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது.