பீட்டா தலைமையகத்தை ஆட்டம் காண வைத்த அமெரிக்க தமிழர்கள்

பீட்டா தலைமையகத்தை ஆட்டம் காண வைத்த அமெரிக்க தமிழர்கள்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரீனா உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் தொடர்ச்சியாக 7 நாட்கள் இளைஞர்களின் எழுச்சி போராட்டம் நடந்து வரும் நிலையில் அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் அங்குள்ள பீட்டா தலமையகத்தின் முன் போராட்டம் நடத்தி கெத்து காட்டியுள்ளனர். இதனால் பீட்டா அமைப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.

நேற்று காலை 10 மணிக்கு அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தில் செயல்பட்டு வரும் பீட்டா அமைப்பின் தலைமையகம் முன்பு, அமெரிக்க வாழ் தமிழர்கள் சுமார் 2000 பேர் ஒன்று கூடி ஜல்லிக்கட்டு ஆதரவாக போராட்டம் நடத்தியுள்ளனர்.

இந்த போராட்டத்தில் அமெரிக்காவின் 13 மாகாணங்களில் வசித்து வரும் தமிழர்கள் கலந்து கொண்டுள்ளனர். வாட்ஸ் ஆப்,பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாக இந்த போராட்டத்திற்கு ஒருங்கிணைந்த தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.அதனைத் தொடர்ந்து சிங்கத்தின் குகைக்கே சென்று சண்டையிடுவது போல, பீட்டா அமைப்பின் உலகத் தலைமையகம் முன்பே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் தமிழர்கள் ஈடுபட்டுள்ளனர்.

“தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கம் எங்களுக்கு இருக்கிறது.இருப்பினும் எங்களால் முடிந்த அளவு, அமெரிக்காவில் உள்ள பீட்டா தலைமையகம் முன்பு போராட்டம் நடத்தியுள்ளோம். எங்களுக்கு ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நிரந்தர முடிவு வேண்டும். பீட்டா இந்தியா அமைப்பு முதலில் தமிழர்களின் கலாச்சாரத்தை புரிந்து கொள்ள வேண்டும். இது வெறும் டிரைலர்தான். மெயின் பிக்சர் இனிதான் இருக்கிறது.”என போராட்டத்தில் கலந்து கொண்ட அமெரிக்க வாழ் தமிழர் ஒருவர் உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.

Leave a Reply