ஈரான் மீது புதிய பொருளாதார தடை விதிக்க வலியுறுத்தல்

எண்ணெய் வளமிக்க ஈரான் தொடர்ந்து அணுசக்தி திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இதனால் அந்த நாட்டுக்கு எதிராக ஐ.நா. சபை பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

அணுசக்தி பிரச்சனையில் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே ஜெனீவாவில் நடந்த பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து, ஈரான் மீது அமெரிக்க எம்.பி.க்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். அவர்கள் ஈரான்மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்று ஜனாதிபதி ஒபாமாவை வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் ஒபாமா இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். உலக வல்லரசு நாடுகள் ஈரானுடன் உடன்படிக்கை செய்து கொள்ள வசதியாக அந்த நாட்டின் மீது புதிய பொருளாதார தடை விதிக்கும் திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்பது அவரது விருப்பம்.

மேலும், வெள்ளை மாளிகையில் அமெரிக்க எம்.பி.க்களுடன் ஒபாமா 2 மணி நேரத்துக்கும் மேலாக இந்தப் பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி மற்றும் எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், அமெரிக்க எம்.பி.க்களிடம் ஒபாமா பேசுகையில், “ஈரான் உடன்பாட்டுக்கு வராத பட்சத்தில்தான் புதிய தடைகள் விளைவுகளை ஏற்படுத்துவதாக அமையும். ராஜ்யரீதியில் ஈரான் உடன்பாடு செய்துகொள்ள வசதியாக புதிய பொருளாதார தடை விதிக்க 6 மாத காலம் அவகாசம் கொடுக்கலாம்” என கூறினார்.

இதுதொடர்பாக அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கூறுகையில், “ ஈரானுடன் உடன்படிக்கை செய்துகொள்ளாவிட்டால், அந்த நாடு தொடர்ந்து யுரேனியம் செறிவூட்டும் செயலில் ஈடுபடும்” என எச்சரித்துள்ளார்.

வெள்ளை மாளிகை விடுத்துள்ள செய்திக்குறிப்பிலும் இந்த எச்சரிக்கை எதிரொலிக்கிறது. அதில், “ஈரானுடன் உடன்படிக்கை ஏற்படுத்தாவிட்டால், அந்த நாடு யுரேனியத்தை செறிவூட்டி இருப்பை அதிகரிக்கும். கூடுதல் ஆலைகளை நிறுவும். புளுட்டோனியம் அணுஉலையை அராக் நகரில் ஏற்படுத்தும்” என கூறப்பட்டுள்ளது.

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவித் ஜாரிப், பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Leave a Reply