இந்திய ஆராய்ச்சியாளர்களை உள்ளடக்கிய குழுவினர் உருவாக்கிய தொழில்நுட்பத்தை அனுமதியின்றி பயன்படுத்திய விவகாரத்தில், விஸ்கான்சின் பல்கலைக்கழகத்திற்கு 1,400 கோடி ரூபாய் வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் முன்னாள் மாணவர்களின் ஆராய்ச்சி அமைப்பு உருவாக்கிய தொழில்நுட்பத்தை ஐபோன், ஐபேட் போன்றவற்றில் ஆப்பிள் நிறுவனம் பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த தொழில்நுட்பத்தை ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற பிட்ஸ் பிலானி கல்லூரியில் படித்த குரிந்தர் சோஹி, டெரனி விஜய்குமார் என்னும் 2 இந்தியர்கள் உட்பட 4 பேர் கொண்ட குழு உருவாக்கி, அதற்கு காப்புரிமையும் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த தொழில்நுட்பத்தை ஆப்பிள் நிறுவனம் அனுமதியின்றி பயன்படுத்தி வருவதாக அமெரிக்காவின் மேடிசன் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வில்லியம் கோன்லி, நஷ்ட ஈடாக சுமார் 1,400 கோடி ரூபாயை விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி அமைப்புக்கு, ஆப்பிள் நிறுவனம் வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கடும் உழைப்புக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என விஸ்கான்சின் பல்கலைக்கழக ஆராய்ச்சி பிரிவின் தலைவர் கார்ல் குல்பிரான்ட்சென் தெரிவித்துள்ளார்.
இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கிய குழுவில் உள்ள குரிந்தர் சோஹி, தற்போது விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தின் கணினி துறையில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மற்றொரு ஆராய்ச்சியாளரான டெரனி விஜய்குமார், இந்தியானாவில் உள்ள பர்டே பல்கலைக்கழகத்தில் மின்னணு துறை பேராசிரியராக உள்ளார்.
இவர்கள் இருவரும் ராஜஸ்தானில் உள்ள பிட்ஸ் பிலானி கல்லூரியில் பி.டெக் மின்னணு தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றவர்கள் ஆவர். இவர்களின் மென்பொருள் தொழில்நுட்பம் அதிவேகமாக செயல்படக்கூடியது. இதை ஆப்பிள் நிறுவனம் தனது செல்போன்களில் கடந்த பல வருடங்களாக அனுமதியின்றி பயன்படுத்தி வந்த நிலையில், 1,400 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.