தடுப்பூசிகளின் பலன்கள்

p48b

ந்தக் காலத்தில் குணப்படுத்த முடியாத கொடிய நோயான பெரியம்மை (Small pox), ஒரே நேரத்தில் பல்லாயிரக் கணக்கான உயிர்களைப் பலி வாங்கிக் கொண்டிருந்தது. பெரியம்மை நோயை உண்டாக்கும் ‘வெரியோலா’ என்ற வைரஸை, தோலில் செலுத்தி, நோய்த் தடுப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். ஆங்கிலத்தில் ‘இனாகுலேஷன்’ என்று அழைக்கப்படும் இந்தத் தடுப்புமுறை அப்போது பிரபலம். ஆனால், இதில் பல ஆபத்தான பக்கவிளைவுகளும் இருந்தன. எனவே, இங்கிலாந்து மருத்துவர் எட்வர்ட் ஜென்னர், பெரியம்மையைத் தடுக்கும் வைரஸைச் செலுத்துவதற்குப் பதிலாக, பசுக்களுக்கு அம்மை நோயை ஏற்படுத்துகிற ‘கௌ பாக்ஸ்’ வைரஸைச் செலுத்தி, புது மாதிரியான தடுப்பு முறையைக் கண்டுபிடித்தார். இந்த தடுப்பு முறைக்கு ‘வேக்சினேஷன்’ என்று பெயரிட்டார். உலக அளவில் முறையான தடுப்பு மருத்துவத்தின் தொடக்கம் இதுதான்.

1796-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட பெரியம்மைத் தடுப்பூசியின் பலனால், 1979-ம் ஆண்டு பெரியம்மை நோய் உலகிலிருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்டது. தடுப்பூசி கண்டுபிடிப்பிலும் அதன் பயன்பாட்டிலும் கிடைத்த முதல் வெற்றி இது. இதைத் தொடர்ந்து பல தரப்பட்ட நோய்களுக்குத் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. எனவே, தடுப்பூசிகளைப் பற்றிப் பேசும்போது 1979ம் ஆண்டையும், ‘தடுப்பு மருத்துவத்தின் தந்தை’ என்று அழைக்கப்படும் எட்வர்ட் ஜென்னரையும் நினைவு கூராமல் இருக்க முடியாது.

தடுப்பூசிகளின் பலன்கள்

இன்றைய நவீன தொழில்நுட்ப உத்திகளைப் பயன்படுத்தி, மிகவும் பாதுகாப்பான, பக்கவிளைவுகள் அவ்வளவாக இல்லாத தடுப்பூசிகள் இப்போது தயாரிக்கப்படுகின்றன. இவற்றின் பலனாக, போலியோ நோய் கூடியவிரைவில் உலகிலிருந்து விடைபெறப்போகிறது. தட்டம்மை, ருபெல்லா, பிளேக், காலரா போன்றவை கொள்ளை நோயாகப் பரவுவது தடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகளையும் தடுப்பு மருந்துகளையும் முறையாகப் பயன்படுத்தினால், 27 வகை நோய்களைத் தடுக்க முடிகிறது. இதனால், மக்களின் ஆயுட்காலமும் அதிகரித்து உள்ளது.

இந்தியாவில் தடுப்பு மருத்துவம்

1802-ம் ஆண்டு ஜூன் 14-ம் நாள் மும்பையில் அன்னா தஸ்தால் என்ற மூன்று வயதுச் சிறுவனுக்குப் பெரியம்மை தடுப்பூசி போடப்பட்டதுதான் இந்தியாவில் தடுப்பு மருத்துவத்தின் தொடக்கம். 1892-ம் ஆண்டில் நாட்டில் அனைவரும் தடுப்பூசிகள் போடப்படவேண்டும் என்ற, கட்டாயச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 2010-ம் ஆண்டு வரை, ஒவ்வொரு நோய்க்கும் தனித்தனியாகத் தடுப்பூசி போடப்படுவது வழக்கத்தில் இருந்தது. 2011 அக்டோபர் மாதத்திலிருந்து, ஒரே நேரத்தில் பல நோய்களுக்குத் தடுப்பு ஆற்றல் உருவாவதற்கு ‘பென்டாவேலன்ட்’ எனும் கூட்டுத் தடுப்பூசி போடுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.

போலியோ இல்லாத இந்தியா!

1977-ல் இந்தியாவில் பெரியம்மை நோயை ஒழித்துவிட்டோம். 1978-ல் ‘விரிவாக்கப்பட்ட தேசிய தடுப்பு ஊசித் திட்டம்’ (Expanded Programme of Immunization- EPI) வரையறை செய்யப்பட்டது. இதன்படி, கிராமம், நகரம் என அனைத்து ஊர்களிலும் உள்ள இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பிசிஜி, முத்தடுப்பு ஊசி, டைபாய்டு தடுப்பூசி, போலியோ சொட்டுமருந்து ஆகியவை இலவசமாகப் போடுவது வழக்கத்துக்கு வந்தது. 1983-ல் இந்தத் திட்டத்தில், கர்ப்பிணிகளுக்கு ‘டெட்டனஸ் டாக்சாய்டு’ தடுப்பூசி சேர்த்துக்கொள்ளப்பட்டது. 1985-ல் ‘போலியா ப்ளஸ்’ எனும் தடுப்பு மருந்துத் திட்டம் செயலுக்கு வந்தது. இதன் பலனால் 2014-ல் இந்தியா போலியோ இல்லாத நாடு என்ற சிறப்பைப் பெற்றது.

புதிய தடுப்பூசி அட்டவணை

தற்போது, அரசு மருத்துவமனைகளில் 10 நோய்களுக்கு இலவசமாகத் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. அதேவேளையில், குழந்தைகளின் நலம் காப்பதில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளும், ‘இந்தியக் குழந்தைகள் நல மருத்துவக் கூட்டமைப்பு’ (IAP) 15 நோய்களுக்குக் கட்டாயத் தடுப்பூசிகள் போடப்பட
வேண்டும் என்றும், ஏழு நோய்களுக்கு விருப்பத்தின் பேரில் போடப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது. (அண்மையில் வெளிவந்துள்ள புதிய தடுப்பூசி அட்டவணை இங்கு தரப்பட்டுள்ளது.)

எல்லா வயதினருக்கும் தடுப்பூசி

தொடக்கத்தில் குழந்தைகளுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இப்போது, இள வயதினர், முதியவர் என அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. இதன் மூலம், உலக அளவில் பல்வேறு தொற்றுநோய்களை ஒழித்து, மக்களின் ஆரோக்கியத்தை இன்னும் மேம்படுத்த முடியும் என்று நம்புகிறது உலக சுகாதார நிறுவனம். இதற்குப் பொதுமக்களின் விழிப்புஉணர்வும் ஒத்துழைப்பும்தான் உடனடியாகத் தேவை.

மருத்துவரின் ஆலோசனைப்படி தேவைப்படும்போது போடப்பட வேண்டிய தடுப்பூசிகள் விவரம்:

இன்ஃபுளுயென்சா தடுப்பூசி

மெனிங்கோகாக்கல் தடுப்பூசி

ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி

காலரா தடுப்பூசி

வெறிநாய்க்கடி தடுப்பூசி

மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி

நிமோனியா தடுப்பூசி – பிபிஎஸ்வி23

 

Leave a Reply