கமல் ஒரு திரையுலக மேதாவி என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம்தான். ஆனால் தன்னுடைய மேதாவித்தனத்தை பாமரனுக்கும் புரியும் வகையில் படம் எடுப்பதில்தான் வெற்றியே இருக்கின்றது. குணா, குருதிப்புனல் பாணியில் ஒருசில குறிப்பிட்ட ஆடியன்ஸ்களுக்காக மட்டுமே படம் எடுப்பதை கமல் எப்போது நிறுத்த போகிறார் என்பது தெரியவில்லை. இருப்பினும் கமலின் அபாரமான நடிப்பு, சிறப்பான திரைக்கதை, மற்ற நடிகர்களை கையாண்டவிதம், என அனைத்தையுமே மிகச்சரியாக செய்துள்ளார் கமல். கண்டிப்பாக அவார்டு நிச்சயம். ஆனால் கலெக்ஷன்?
தமிழ் சினிமாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் கமல். ஆனால் சொந்த வாழ்க்கையில் வேண்டா வெறுப்பாக கட்டிக்கொண்ட மனைவி ஊர்வசி, தந்தையை எதிரி மாதிரி பார்க்கும் மகன், பெர்சனல் டாக்டர் என்ற பெயரில் கள்ளக்காதலி, என போய்க்கொண்டிருக்கும் வாழ்க்கையில் திடீர் திருப்பமாக கமலுக்கு பிரெய்ன் கேன்சர் நோய் வருகிறது. முற்றிய நிலையில் இருக்கும் இந்த நோயினால் இன்னும் சில நாட்களில் இறந்து விடுவோம் என்று தெரிகிறது கமலுக்கு. கடைசியாக தனது ரசிகர்களுக்கு ஒரு நகைச்சுவை படம் கொடுக்க வேண்டும் என முடிவு செய்யும் கமல், தன்னை உருவாக்கிய குருநாதர் பாலசந்தரை பார்த்து தனக்காக ஒரு படம் எடுக்க கெஞ்சுகிறார். கமலின் மாமனார் தயாரிப்பாளர் பூர்ண சந்திர ராவுக்கும் கே.பாலசந்தருக்கும் ஆகாது. எனவே கமலை வைத்து படமெடுக்க மறுக்கின்றார் பாலசந்தர். ஆனால் கமல் இன்னும் சிலநாள்தான் உயிரோடு இருப்பார் என தெரிந்தவுடன் படமெடுக்க சம்மதிக்கின்றார்.
இந்நிலையில் இளவயதில் தான் காதலித்த யாமினி என்ற பெண் மூலம் தனக்கு ஒரு மகள் இருக்கின்றார் என்பது கமலுக்கு தெரிய வருகிறது. யாமினியின் கணவர் கமலிடம் இந்த செய்தியை கூறி தந்தையையும், மகளையும் சேர்த்து வைக்க முயற்சி செய்கிறார். ஆனால் கமல் மகள் பார்வதி மேனன் அவரை தந்தையாக ஏற்றுக்கொள்ள மறுக்கின்றர்.
இந்நிலையில் கமலும் பாலசந்தரும் ‘உத்தம வில்லன்’ என்ற நகைச்சுவை படத்தை எடுக்கின்றனர். இந்த படத்தின் நாயகியாக பூஜா குமார், வில்லனாக நாசர் என படம் வளர்ந்து கொண்டு வரும்போதே கமலின் கேன்சரும் முற்றிக்கொண்டு வருகிறது. ஒரு கட்டத்தில் கமலின் நோயை கமல் குடும்பத்தினர்களுடன் சொல்ல வேண்டிய நிலை. கமலின் நோயை அறிந்து கமல் மீது கோபமாக இருந்த மனைவி ஊர்வசி, மாமனார் கே.விஸ்வநாத், மகன் என அனைவரும் அவர் மீது பாசத்தை கொட்டுகின்றனர். உத்தம வில்லன் கிளைமாக்ஸ் காட்சியும் கமலின் கேன்சர் கிளைமாக்ஸும் என்ன ஆனது என்பது தான் படத்தின் கிளைமாக்ஸ்.
எவ்வளவு பெரிய கேரக்டர் கொடுத்தாலும் அசால்ட்டாக ஊதித்தள்ளும் கமல், சூப்பர் ஸ்டார் கேரக்டரை அசால்ட்டாக செய்துவிடுகிறார். ஒரு நடிகனுக்குரிய பர்சனல் விஷயங்களை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார். கே.பாலசந்தரிடம் அவர் பேசும் வசனங்கள் அவருடைய உண்மைக்கதையை பிரதிபலிப்பது போல் தோன்றுகிறது. உத்தம வில்லன் சரித்திரக்கதையில் கூத்துக்கலைஞனாக நகைச்சுவையில் வெளுத்து கட்டியிருக்கின்றார் கமல். ஆனால் கொஞ்சம் ஓவர்டோஸ் போல இருக்கின்றது இந்த பகுதி. ஒரு கட்டத்திற்கு மேல் வடிவேலுவின் 23ஆம் புலிகேசியை திரும்ப பார்ப்பது போன்ற சலிப்பு தெரிகிறது. சரித்திரக்கதையின் பாகத்தை இன்னும் கமல் குறைத்திருக்கலாம்.
பூஜா குமார், ஊர்வசி, ஆண்ட்ரியா, பார்வதி மேனன் என நான்கு ஹீரோயின்கள். அனைவருக்குமே சம அளவு நடிப்புக்குரிய வாய்ப்பு கொடுத்துள்ள கமலின் புத்திசாலித்தனத்தை பாராட்டாமல் இருக்க முடியாது. பூஜாகுமாருக்கு கொஞ்சம் பொறுப்பு அதிகம். அவரும் இதை புரிந்து கொண்டு சிறப்பாக நடித்துள்ளார்.
கூத்துக்கலைஞன் பாகத்தில் கமலை விட சிறப்பாக நடித்துள்ளார் நாசர். இவருடைய பாடி லாங்குவேஜை ரசிக்காதவர்கள் கண்டிப்பாக இருக்க மாட்டார்கள். இவருக்கு அமைச்சர்களாக வரும் பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் மற்றும் சண்முகராஜன் ஆகியோர்களின் நடிப்பும் ஓகே.
ஜிப்ரானின் இசையில் ஏழு பாடல்கள். அனைத்துமே கேட்கும்படியாக இருக்கின்றது. சரித்திரக்கதையின் பின்னணி இசையில் ஜிப்ரான் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மேலும் இந்த படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார் என்று டைட்டிலில் போடுகின்றார்கள். கமல் டைட்டிலுக்காக மட்டும் பயன்படுத்திய இயக்குனர்கள் வரிசையில் இவரையும் சேர்த்து கொள்ளலாம். முழுக்க முழுக்க கமல் டாமினேஷனில் உருவாகியுள்ள இந்த படத்தை ரமேஷ் அரவிந்த் தான் உண்மையில் இயக்கினார் என்று சொன்னால் அவருடைய குடும்பத்தினர்களே நம்புவார்களா? என்று தெரியவில்லை.
மொத்தத்தில் உத்தமவில்லன் சிலருக்கு மட்டும் உண்மையில் வில்லன் தான்