கூடங்குளம் மின்சாரத்தை கர்நாடகத்திற்கு அனுப்ப வேண்டாம்: சுப் உதயகுமாரன்

கூடங்குளம் மின்சாரத்தை கர்நாடகத்திற்கு அனுப்ப வேண்டாம்: சுப் உதயகுமாரன்

கூடங்குளம் அணு உலையை இழுத்து மூட வேண்டும் என்று போராட்டம் நடத்திய சுப உதயகுமாரன், தற்போது கூடங்குளத்தில் தயாராகும் மின்சாரத்தை காவிரி தண்ணீர் கொடுக்க மறுத்த கர்நாடக மாநிலத்திற்கு அனுப்ப வேண்டாம் என்று போர்க்கொடி தூக்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘காவிரி நீரைக் கொடுக்க கர்நாடக அரசு மறுத்து வருகிறது. ஆனால், கூடங்குளத்தில் இருந்து கர்நாடகாவுக்கு மின்சாரம் கொடுக்கப்படுகிறது. அதைக் கொடுக்கக் கூடாது என வலியுறுத்தினோம். கூடங்குளம் அணுமின் நிலையத்தைச் சுற்றி 30 கி.மீ. தூரத்துக்குள் வசிக்கும் மக்கள் பட்டியலை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் தகவல் அறியும் சட்டத்தின் மூலமாகக் கோரியும் எங்களுக்குக் கொடுக்கப்படவில்லை.

அப்படி ஒரு தகவல் தங்களிடம் இல்லை என வட்டாட்சியர் மூலம் தகவல் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அணுமின் நிலையங்களில் பெரிய விபத்துக்கள் நடந்தால், உலைகளிலிருந்து 30 கி.மீ. சுற்றளவில் வாழும் மக்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்பது சர்வதேச நடைமுறை. அந்த விதி இங்கே கூடங்குளத்திலும் கடைபிடிக்கப்பட வேண்டுமானால் அங்கு வசிக்கும் மக்கள் தொகை குறித்த முழுத் தகவலும் தெரிந்திருக்க வேண்டும். ஆனால், அந்தத் தகவல்கள் பராமரிப்பில் இல்லை என்னும் பதில் சிறுபிள்ளைத்தனமானதாகவும், ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகவும் இருக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய அணுஉலை வளாகமாக உருவெடுக்கும் கூடங்குளம் அணுஉலைகளைச் சுற்றி எவ்வளவு பேர் உயிர் வாழ்கிறார்கள் என்பதுகூட யாருக்கும் தெரியாமல் இருப்பது உண்மையிலேயே மிகவும் அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது. உலைகளைச் சுற்றி வாழும் மக்கள் தொகை எவ்வளவு என்று தெரியாமல் யாரை வெளியேற்ற முடியும்? எப்படி வெளியேற்றம் செய்வார்கள்? எப்படி தேவையான மருத்துவ உதவிகள் செய்ய முடியும்? என்று பல கேள்விகள் எழுகின்றன.

இந்த மிக முக்கியமான அடிப்படைத் தகவல் இல்லாமலே, 3, 4, 5, 6 என கூடுதல் அணுஉலைகள் கட்ட அனுமதிப்பது மாவட்ட நிர்வாகத்தின் கண்டுகொள்ளாத் தன்மையையும், மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பற்றத் தன்மையையும் காட்டுகிறது. அந்தத் தகவல்களை திரட்டி, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வரை கூடங்குளத்தில் கூடுதல் அணுஉலைகள் கட்டக் கூடாது. அதுவரை, அனைத்து கட்டுமான வேலைகளையும் நிறுத்திவைக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

Leave a Reply