உத்தரகாண்ட்: பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு நீதிமன்றம் உத்தரவு
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியதை கண்டித்து தமிழக தலைவர்கள் உள்பட இந்தியாவின் பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தியதை எதிர்த்து அம்மாநில முதல்வர் ஹரிஷ் ராவத் உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தில் ஹரீஷ் ராவத் ரிட் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரகண்ட் மாநில சட்டப்பேரவையில் மார்ச் 31-ஆம் தேதி தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்குமாறு ஹரீஷ் ராவத்துக்கு உத்தரவிட்டுள்ளது. தனது பெரும்பான்மையை அவர் நிரூபித்துவிட்டால் ஜனாதிபதி ஆட்சி நீதிமன்றத்தால் ரத்து செய்யப்படும் என கூறப்படுகிறது.
உத்தரகாண்ட் உயர் நீதிமன்றப் பதிவாளர் முன்னிலையில் மார்ச் 31-ஆம் தேதி அதாவது நாளை காலை 11 மணிக்கு சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்த வழக்கில் ஹரீஷ் ராவத்துக்கு ஆதரவாக வாதாடிய உச்ச நீதிமன்ற வழக்குரைஞரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அபிஷேக் மனு சிங்வி கூறியதாவது: சட்டப்பேரவையில் மார்ச் 28-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். அதே கோரிக்கையைத்தான் ஹரீஷ் ராவத்தும் இரண்டு முறை முன்வைத்தார். தற்போது, மார்ச் 28-ஆம் தேதிக்குப் பதிலாக மார்ச் 31-ஆம் தேதி என மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் உத்தரகண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது. இந்த மனு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், நீதிபதிகள் ஆர்.பானுமதி, யு.யு.லலித் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று பரிசீலனைக்கு வந்தது. அப்போது மனு மீதான விசாரணையை அடுத்த வாரத்திலிருந்து மேற்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் உத்தரகண்ட் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது மத்திய அரசுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய பின்னடைவு என்றும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை சீர்குலைக்க மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இது தடையாக அமையும் என்றும் ஹரிஷ் ராவத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.