ஆர்யா சரவணனாகவும் சந்தானம் வாசுவாகவும் நடித்திருக்கும் இந்தப்படத்தில், இன்றைய இளைஞர்களுக்காக, நண்பனா? மனைவியா? இருவரில் யார் முக்கியம்? என்கிற பட்டிமன்றத்தை நடத்தி அதற்கு ஒரு தீர்ப்பையும் சொல்லியிருக்கிறார்கள்.
ஆர்யாவும் சந்தானமும் பிறந்ததிலிருந்தே நண்பர்கள், படித்தது வளர்ந்தது எல்லாம் ஒள்றாகத்தான், நன்றாகப் படித்தார்களோ இல்லையோ நன்றாகக் குடிக்கிறார்கள். குடிப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வேலையே இல்லையா என்று யாரும் கேட்டுவிடக்கூடாது என்பதற்காக, இருவரும் சேர்ந்து கைபேசி விற்கும் கடையொன்றை நடத்திக்கொண்டிருப்பதாகக் காட்டி அந்தக்கடையில் ஓரிரு காட்சிகளையும் படமாக்கிவிட்டார்கள்.
சந்தானத்துக்கு, பானுவுடன் திருமணம் நடக்கிறது. முதலிரவுகூட நடக்கமுடியாத அளவு நண்பன் ஆர்யாவால் சிக்கல் ஏற்படுகிறது. அதனால் நண்பனைக் கழற்றிவிட முடிவெடுக்கிறார். அதற்காக அவர் செய்யும் வேலைகள் வெற்றி பெற்றதா இல்லையா என்பதே படம். பாடல்காட்சிகள் தவிர மற்ற எல்லாக்காட்சிகளிலும் ஆர்யாவும் சந்தானமும் ஒன்றாகவே இருக்கிறார்கள்.
படத்தில் நாயகி தமன்னா உட்பட வேறு நடிகர் நடிகையரும் இருக்கிறார்களா என்று சந்தேகப்படும் அளவுக்கு இருவரும் படத்தை ஆக்கிரமித்திருக்கின்றனர். கொஞ்சம் விட்டாலும் சந்தானம்தான் படத்தின் நாயகன் என்று சொல்லிவிடுகிற அளவு காட்சிகள் இருந்தாலும் அதுபற்றிக் கவலைப்படாமல் தன்னுடைய வேலையைச் சிரத்தையாகச் செய்து சந்தானத்தின் எல்லா கலாய்ப்புகளுக்கும் ஈடுகொடுக்கிறார் ஆர்யா.
சந்தானமும் ஆர்யாவும் பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். சில இடங்களில் சிரிப்பு வருகிறது. ஆர்யா, நாயகி தமன்னாவைப் பார்த்தவுடனே காதல் சொல்லும் காட்சி பழசென்றாலும் பார்க்கிற மாதிரி இருக்கிறது. அவருக்கு தாஜ்மகால் பரிசு கொடுப்பது என்கிற ஒன்றுமில்லாத விசயத்தை வைத்துக்கொண்டு மூன்று நான்கு காட்சிகளைக் கடத்தியிருக்கிறார்கள்.யோசித்துப்பார்த்தால் மொத்தப்படமும் அப்படித்தான் இருக்கிறது.
தமன்னா, தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்திருக்கிறார். அவரையும் சும்மாவிடாமல் குடிக்கவைத்துப் பெருமை தேடிக்கொண்டிருக்கிறார் இயக்குநர். ஆர்யா, சந்தானம், தமன்னா ஆகிய மூவருமே குடித்துவிட்டு வித்யுலேகாராமன் வீட்டுக்குப் போய்த் தகராறு செய்யும் காட்சிகள் ரொம்ப அதிகம். தமன்னாவின் தோழியாக வருகிற வித்யுலேகாவை வைத்துக்கொண்டு குண்டான பெண்கள் பற்றி மோசமாகப் பேசுகிறார்கள். சிரிப்பென்று நினைத்து அவர்கள் செய்திருக்கும் காட்சிகளை கொஞ்சம் கூட ரசிக்கமுடியவில்லை.
கடற்கரையில் உண்ணாவிரதம் இருக்கிற காட்சிகளில் சமகால அரசியலை நையாண்டி செய்திருக்கிறார்கள். ஷகிலாவை வைத்துக்கொண்டு ஊடகங்களையும் வாரியிருக்கிறார்கள். கடைசியாக பட்டிமன்ற நடுவர் போல வருகிறார் விஷால். காவல்துறைஅதிகாரியாக இருந்தாலும் அவரும் மதுக்குடிக்க இடமில்லாமல் அலைகிறார் என்று காட்ட இயக்குநர் ராஜேஷைத் தவிர வேறு யாராலும் முடியாதென்றே தோன்றுகிறது.
நகைச்சுவைப் படமென்ற போர்வையில் இவை அனைத்தையும் செய்திருப்பதால் தப்பித்துக்கொள்ளலாம். நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு படத்துக்குப் பலம். காட்சிகள் மற்றும் பாடல்கள் என எல்லா இடங்களிலும் அவருடைய இருப்பு தெரிகிறது. இமான் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். பின்னணி இசையிலும் பரவாயில்லை.
ஒவ்வொருவருக்கும் தங்கள், வாழ்வில் நட்புக்கு எவ்வளவு இடம், இல்லறதுக்கு எவ்வளவு இடம் என்று பிரித்து வாழ்கிற அறிவு இருக்கிறதென்றே சொல்லலாம். ஆனால் இயக்குநர் ராஜேஷூக்கு மட்டும் அந்த அளவுகோல் தெரியாமல் போனது வியப்பு. ஆனாலும் இதையே இன்றைய இளைஞர்களின் பெரிய சிக்கல் என்பது போலச் சித்தரித்து ஒரு முழுநீளப்படத்தை எடுக்கும் அவருடைய தைரியம் வியப்புக்குரியதுதான்.
Thanks to vikatan.com