நடிப்பு தெரிந்த அளவுக்கு சட்டம் தெரியவில்லை. வாகை சந்திரசேகர் குறித்து ஜெயலலிதா

நடிப்பு தெரிந்த அளவுக்கு சட்டம் தெரியவில்லை. வாகை சந்திரசேகர் குறித்து ஜெயலலிதா

vagaiதமிழக சட்டமன்றத்தில் இன்று சுற்றுச்சூழல், வனத்துறை, தமிழ்வளர்ச்சி, செய்தித்துறை எழுதுபொருள் மற்றும் அச்சு ஆகிய துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. இந்த விவாதத்தின்போது நடிகரும் திமுக எம்.எல்.வுமான வாகை சந்திர்சேகர், திரைப்பட கலைஞர்களுக்கும், சின்னத்திரை கலைஞர்களுக்கும் விருது வழங்கு விழா எப்போது நடைபெறும் என்ற கேள்வியை எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பேசிய முதல்வர், ‘ஒருசில காரணங்களினால் திரைப்படக் கலைஞர்களுக்கும், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் கடந்த சில ஆண்டுகளாக விருதுகள் வழங்க முடியவில்லை. எல்லாவற்றிற்கும் சேர்த்து ஒரு பிரமாண்டமான விழா நடத்தப்படும், விரைவில் அந்த விருதுகள் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.

மேலும் வாகை சந்திரசேகர், சிவாஜி கணேசனின் சிலை, கடற்கரையிலேயே சிலை தொடர்ந்து இருக்கும்படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதற்கு பதில் கூறிய  முதல்-அமைச்சர் ஜெயலலிதா, “நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திருவுருவச் சிலை தற்போது இருக்கின்ற இடத்தைவிட்டு மாற்ற வேண்டுமென்பது இந்த அரசின் விருப்பம் அல்ல. அது நீதிமன்றத்தின் உத்தரவு. அதை அகற்றியே ஆக வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டுவிட்டது. தீர்ப்பளித்துவிட்டு, திரும்பத் திரும்ப அரசை அழைத்து, இன்னும் ஏன் அதை அகற்றவில்லை என்று உயர் நீதிமன்றம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஆகவே, சிவாஜி கணேசனுக்காக, அவர் நினைவைப் போற்றும்வகையில், ஒரு நினைவு மண்டபம் எழுப்பப்படும் என்று ஏற்கெனவே இந்த அவையில் நான் அறிவித்திருக்கிறேன். அந்த நினைவு மண்டபம் கட்டி முடிக்கும்போது, சிலை அங்கே மாற்றப்படும் என்று சொல்லித்தான் உயர் நீதிமன்றத்தை சமாதானப்படுத்தியிருக்கிறோம். ஆகவே, அது இந்த அரசின் விருப்பம் அல்ல. நீதிமன்றத்தின் உத்தரவு என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

மீண்டும் வாகை சந்திரசேகர், சிவாஜி சிலை தொடர்ந்து அதே இடத்தில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியபோது, ‘முதல்-அமைச்சர் ஜெயலலிதா சற்று காட்டமாக, ‘உறுப்பினருக்கு திரைப்படத் துறையைப்பற்றியும், நடிப்பைப்பற்றியும் தெரிந்த அளவிற்கு, சட்டத்தைப் பற்றி அவருக்குத் தெரியவில்லைபோல் தெரிகிறது. ஆகவே, அவர் வேண்டுமென்றால், உயர் நீதிமன்றத்தில் ஒரு பொது நல மனு போட்டு, சிலை அங்கேயே நீட்டிக்க அனுமதி பெற்றால், அதைச் செய்ய நாங்கள் தயார்’ என்று கூறினார்.

Leave a Reply