எனது அன்புச் சகோதரர் நடராஜன். வைகோ அதிமுகவை நெருங்குவது ஏன்?
சமீபத்தில் மக்கள் நல கூட்டணியில் இருந்து வெளியேறிய வைகோவின் மதிமுக, அதிமுகவை நெருங்கி வருவதாகவும், விரைவில் கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
திமுக, பாஜக என எந்த கூட்டணியிலும் செல்ல முடியாத நிலையில் உள்ள மதிமுகவுக்கு இருக்கும் ஒரே வழியாக அதிமுக மட்டுமே உள்ளது. இதனால்தான் கடந்த சில நாட்களாக அனைத்து தரப்பினர்களும் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றஞ்சாட்டிய நிலையில் வைகோ மட்டும் அதிமுகவு தலைமைக்கு ஆதரவாக அறிவிக்கை விடுத்தார்.
ஏற்கனவே சசிகலாவின் கணவர் நடராஜனும், வைகோவும் நண்பர்க்ள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நூல் வெளியீட்டு விழா ஒன்றில் வைகோவும் நடராஜனும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் வைகோ பேசியபோது எனது அன்பு சகோதரர் நடராஜன் என்று அன்புடன் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
மேலும் வைகோ பேசியதாவது: இந்த நூலை பெற்றவர் அன்பு சகோதரர் நடராசன் அவர்கள். நான் நன்றியுள்ளவன். தமிழரின் சுவடுகளே இல்லாமல் இந்திய அரசு ஈழத்தை அழித்ததே, எந்த புலிக்கொடி தஞ்சையில் பறந்ததோ, அதே தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்தை அமைப்பதற்கு பழ.நெடுமாறனோடு துணை நின்று இடமும் கொடுத்தவர் நடராஜன். அதை நான் நன்றியோடு நினைத்துப் பார்க்கின்றேன். அதேபோல் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கொடியை கையில் ஏந்திக்கொண்டு மாணவத்தலைவனாக நின்ற இந்த நடராஜனை நான் நினைத்துப் பார்க்கின்றேன். எனது திருமணம் குற்றாலத்தில் நடைபெற்ற போது எனது திருமணத்துக்கு மூன்று நாட்கள் துணையாக இருந்து உதவி செய்தது இந்த நடராஜன்தான் என்று எத்தனை பேருக்கு தெரியும். நான் நன்றியுள்ளவன். நன்றியை ஒரு போதும் மறக்கமாட்டேன்.
நடராஜனைப் பாராட்டி பேசியதை நாளை ஊடகங்கள் திரித்து சொல்லலாம். நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. ஐடோன்ட் கேர்” என்றார் ஆவேசமாக.