தேமுதிக கட்சி வேன் மோதி காயமடைந்தவர்களை காப்பாற்றிய வைகோ.

விஜயகாந்த் கட்சி இன்று நடத்தும் ஊழல் எதிர்ப்பு மாநாட்டுக்கு சென்ற வேன் ஒன்று இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் துடித்துக்கொண்டிருந்த இருவரை அவ்வழியே சென்ற வைகோ, மருத்துவமனையில் சேர்த்து அவர்களது உயிர்களை காப்பாற்றியுள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இன்று காலை தனது சொந்த ஊரில் இருந்து, திண்டுக்கல் நகருக்கு திருமணம் ஒன்றிற்காக சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில்  இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு நபர்கள் விபத்துக்குள்ளாகி உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை பார்த்து, அவர்களை உடனடியாக தனது உதவியாளரின் காரில் ஏற்றி, திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்க உதவினார். பின்னர் அங்கு உள்ளவர்களிடம் விசாரித்தபோது, காயமடைந்த இருவரது பெயர்கள் தண்டித்தேவர் மற்றும் விஜயகுமார் என்றும், தேமுதிக மாநாட்டுக்கு அதிக வேகத்தில்சென்ற வேன் ஒன்று  இவர்கள் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை மோதிவிட்டு, நிற்காமல் சென்றதும்  தெரியவந்தது.

திருமங்கலம் மருத்துவமனையில் மருத்துவர் வரும் வரை காத்திருந்து, காயமடைந்தவர்களுக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை செய்யும்படி மருத்துவரிடம் கேட்டுக்கொண்டு பின்னர் திண்டுக்கல்லுக்கு புறப்பட்டார் வைகோ.

சாலையில் உயிருக்கு போராடிய இருவரை வைகோ காப்பாற்றிய மனிதாபமான சம்பவத்தை அப்பகுதியில் உள்ளவர்கள் பாராட்டினர்.

Leave a Reply