மு.க.ஸ்டாலினை விமர்சனம் செய்ய கூடாது: தொண்டர்களுக்கு வைகோ வேண்டுகோள்
ஒரு கட்சியின் தலைவர் இன்னொரு கட்சியின் தலைவரை முதல்வராக்க பாடுபடுவேன் என்று இந்திய அரசியல் வரலாற்றில் யாரும் செய்யாத சபதத்தை செய்தவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. திமுகவில் இருந்து கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து தனிக்கட்சி ஆரம்பித்த வைகோ, தற்போது மீண்டும் திமுகவை அரியணையில் ஏற்றுவதற்கு பதிலாக கட்சியை கலைத்துவிட்டு திமுகவில் ஐக்கியமாகிவிடலாமே என்று அவரது கட்சி தொண்டர்களே கூறி வருகின்றனர். மேலும் மு.க.ஸ்டாலினை ஒருசில மதிமுக தொண்டர்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் மு.க.ஸ்டாலின் குறித்து விமர்சனம் செய்யக் கூடாது என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளா் வைகோ தனது கட்சி தொண்டா்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து வைகோ வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: தி.மு.க. குறித்தோ, அதன் செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் குறித்தோ, ம.தி.மு.க. தொண்டா்கள் முகநூலிலோ, இணையதளத்திலோ, சமூக வலைதளங்களிலோ எந்த விமா்சனமும் செய்யக் கூடாது. அப்படி செய்பவா்கள் ம.தி.மு.க. நலனுக்கு பெருக்கேடு செய்பவா்கள் ஆவார்கள். இதனை மீறி செயல்படுகின்றவா்கள் ம.தி.மு.க.வினராகவோ, கட்சியின் ஆதரவாளா்களாகவோ கருதப்பட மாட்டார்கள். ம.தி.மு.க.வுக்கும் அவா்களுக்கும் எந்தவித தொடா்பும் இருக்காது என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.