இந்தியாவின் குப்பைகளை அகற்ற ‘தூய்மை இந்தியா’ என்ற திட்டத்தை ஆரம்பித்து வைத்த நரேந்திர மோடி, டெல்லியில் விளக்குமாறு சின்னத்தால் படுதோல்வி அடைந்துள்ளார். இந்த தோல்வியை சற்றும் எதிர்பாராத பாரதிய ஜனதா கடும் அதிர்ச்சியில் உள்ளது. மோடியின் வித்தைகள் டெல்லி மக்களிடம் எடுபடாததை அடுத்து பாஜகவின் வீழ்ச்சி ஆரம்பமாகிவிட்டது என்றும், இனி இந்த வீழ்ச்சி அடுத்தடுத்த தேர்தலில் தொடரும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாரதிய ஜனதாவின் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாரதிய ஜனதா கட்சியை மக்கள் விளக்குமாற்றால் விரட்டி, படுதோல்வி எனும் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டார்கள் எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று மதிமுக தலைமையகத்தில் இருந்து வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகின் தலைசிறந்த ஜனநாயக நாடு இந்தியா என்பது 1977க்குப் பின்னர் மீண்டும் இப்போது டெல்லி மாநில வாக்காளர்களால் நிரூபிக்கப்பட்டுவிட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி இமாலய வெற்றி பெற்றுள்ளது. டெல்லி மாநில வாக்காளர்கள் பாசிச இந்துத்துவ வெறிபிடித்த நரேந்திர மோடி அரசுக்குப் பாடம் புகட்டுகின்ற வகையில், பாரதிய ஜனதா கட்சியை விளக்குமாற்றால் விரட்டி, படுதோல்வி எனும் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டார்கள்.
உலக உத்தமர் காந்தியாரை பிரார்த்தனைக் கூட்டத்தில் சுட்டுக் கொன்ற கொலைகாரப் பாவி நாதுராம் விநாயக் கோட்சே எனும் நச்சுப்பாம்பைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடி, சிலையும் எழுப்ப முற்பட்ட இந்துத்துவ சக்திகளுக்கும், அதற்கு வெண்சாமரம் வீசிய நரேந்திர மோடி அரசுக்கும் வாக்காளர்கள் மிகச்சரியான பாடம் கற்பித்துள்ளார்கள்.
சாமானியனுக்கும், சாதாரண மனிதனுக்கும் ஜனநாயகம் ஆட்சி மகுடத்தைச் சூட்டும் என்பதுதான் ஆம் ஆத்மி கட்சியின் விண்முட்டப் புகழ் படைக்கும் வெற்றியாகும். பன்னாட்டுப் பகாசூரக் கம்பெனிகளுக்கும், உள்நாட்டுக் கொள்ளைக்கார கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஏஜென்ட் வேலை பார்த்த நரேந்திர மோடி அரசை, எண்ணி எட்டே மாதங்களில் மக்கள் முற்றாக நிராகரித்து விட்டார்கள்.