அதிமுக அரசுக்கு ஆதரவாக ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்வேன். வைகோ ஏற்படுத்திய திடீர் பரபரப்பு.

vaiko காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணைகள் கட்ட முயற்சிக்கும் திட்டத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காத மத்திய அரசுக்கு பாடம் புகட்ட மத்திய அரசின் அலுவலகங்களின் மின் இணைப்புகளை துண்டிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் ஆவேசமாக பேசியுள்ளார்.

காவிரியில் கர்நாடக அரசு புதிய அணைகள் கட்டும் முயற்சி மற்றும்  காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம், மது ஆகியவற்றை எதிர்த்து  எட்டு நாள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தஞ்சையில் வைகோ நடத்தி வருகிறார்.

நேற்றைய ஐந்தாம் நாளில் பட்டுக்கோட்டை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் அங்கு பேசியதாவது, “தமிழகத்தின் ஜீவாதாரமான காவிரி நீரைத் தடுத்து அணைகள் கட்டப்போவதாக கர்நாடகம் அறிவித்துள்ளது. புதிய அணைகள் கட்டப்பட்டால் தமிழகம் பாலைவனமாகிவிடும். இதைத் தடுக்க வேண்டிய மத்திய அரசு, தமிழ்நாட்டை கிள்ளுக்கீரையாக நினைக்கிறது.

நேரு பிரதமாக இருந்தபோது, பி.சி.ராய் மேற்கு வங்க முதல்வராக இருந்தார். ஒரு பிரச்சினையில் அவருடைய கருத்தை நேரு ஏற்கவில்லை. உடனே பி.சி.ராய், மேற்கு வங்க ஆளுநர் மாளிகைக்கு மின் இணைப்பைத் துண்டித்தார். அதுபோல, தமிழக அரசும் தமிழகத்துக்கு விரோதமாக நடக்கும் மத்திய அரசின் அலுவலகங்களுக்கு மின் இணைப்பை துண்டிக்க வேண்டும். அலுவலகங்களை பூட்ட வேண்டும்.

இதனால், 356-வது பிரிவைப் பயன்படுத்தி அதிமுக அரசைக் கவிழ்த்து விடுவார்களோ என்று நினைக்க வேண்டாம். அப்படி, நடந்தால் 90 சதவீத இடங்களைப் பெற்று நீங்கள்தான் மீண்டும் ஆட்சியை பிடிப்பீர்கள். இந்த நடவடிக்கையால் அதிமுக அரசு கவிழ்ந்தால், நான் ஊர் ஊராக, தெரு தெருவாகச் சென்று உங்களுக்காகப் பிரச்சாரம் செய்வேன்” என்றார் வைகோ.

Leave a Reply