சமீபத்தில் பாலிமர் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்து கொண்டிருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பேட்டியெடுத்தவர் கேட்ட ஒரு கேள்விக்கு டென்ஷனாகி மைக்கை எறிந்துவிட்டு வெளியே சென்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், விஜயகாந்துடன் வைகோ இணைந்த சகவாசம்தான் அவரையும் இவ்வாறு மாற்றிவிட்டது என்று கூறினார்.
மேலும் வைகோவை அடுத்து மற்ற மக்கள் நலக்கூட்டணி தலைவர்களும் இதுபோன்ற நடவடிக்கைகளை செய்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்பதற்கு உதாரணம் தான் வைகோவின் இத்தகைய நடவடிக்கைகள் என்றும் அவர் கூறியுள்ளார்.
விஜயகாந்த் இதுபோன்று பலமுறை பத்திரிகையாளர்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. இதையடுத்து மற்றொரு சம்பவமாக நேற்று வைகோ பத்திரிகையாளர்களிடம் கோபமாக பேசிய வீடியோ வெளிவந்துள்ளது. யார் எந்த கூட்டணியில் இருந்தால் உனக்கென்ன என்று ஒரு பத்திரிகையாளரை ஒருமையுடன் அவர் பேசிய பேச்சு பத்திரிகையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக பத்திரிகையாளர்களிடம் வைகோ கண்ணியமாக நடந்து கொள்பவர் என்ற பெயரை கடந்த பல ஆண்டுகளாக பெற்றவர். தற்போது விஜயகாந்த் உடனான கூட்டணிக்கு பின்னரே இதுபோன்று பேசுவதால் இளங்கோவன் கூறியது உண்மையாக இருக்கக்கூடுமோ என்ற எண்ண வைக்கின்றது.