வை ராஜா வை. திரை விமர்சனம்

vai raja vaiஐஸ்வர்யா தனுஷின் விறுவிறுப்பான திரைக்கதை, ப்ரியா ஆனந்த், டாப்சியின் கவர்ச்சி, யுவன்ஷங்கர் ராஜாவின் அற்புதமான பின்னணி இசை, விவேக், சதீஷின் காமெடி என பல சிறப்பங்கள் ‘வை ராஜா வை’ படத்தில் அமைந்துள்ளது. ‘3’ படத்தின் மூலம் தனது திறமையை நிரூபித்த ஐஸ்வர்யாதனுஷ் மீண்டும் தனது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்

பின்னால் நடப்பதை முன்கூட்டியே அறியும் சக்தியை பெற்ற ஹீரோ கவுதம் கார்த்திக், அந்த சக்தியினால் ஏற்படும் பிரச்சனைகளை எப்படி கையாளுகிறார் என்பதுதான் கதை. சிறு வயதிலேயே அபாரமான சக்தியை பெற்ற கவுதம் கார்த்திக்கை நார்மல் மனிதனாக மாற்ற அவரது தந்தை மருத்துவரிடம் அழைத்து சென்று சிகிச்சை தருகிறார். தந்தையிடம் தனது அபார சக்தியை பயன்படுத்த மாட்டேன் என சத்தியம் செய்யும் கவுதம், கொஞ்சம் கொஞ்சமாக நார்மல் மனிதனாக மாறுகிறார்.

அழகான காதலி, நல்ல வேலை, பாசமுள்ள பெற்றோர்கள், நட்புக்கு சதீஷ் என நிம்மதியாக போய்க்கொண்டிருக்கும் கவுதம் வாழ்க்கையை திசை திருப்புகிறார் விவேக். கிரிக்கெட் சூதாட்டத்தில் விளையாடி 10 லட்ச ரூபாயை தோற்றுவிட்ட விவேக், இழந்த பணத்தை மீட்க கவுதமின் அற்புதமான சக்தியை பயன்படுத்த முடிவு செய்கிறார். கவுதமின் அக்கா திருமணத்திற்கும் ரூ.10 லட்சம் தேவைப்பட விவேக்கின் விளையாட்டிற்கு சம்மதிக்கும் கவுதம், இந்தியா-இலங்கை இடையே நடைபெறும் போட்டியின் ஒவ்வொரு பந்திலும் அடுத்து என்ன நடக்கும் என்பதை சரியாக சொல்லி சில மணி நேரங்களில் ரூ.1 கோடி ஜெயிக்கின்றார். சூதாட்டம் நடத்தும் டேனியல்பாலாஜி  இதனால் அதிர்ச்சி அடைந்து கவுதமை அதன்பின்னர் எப்படியெல்லாம் டார்ச்சர் செய்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கடல் படத்தில் கலகலப்பாக வந்த கவுதம் கார்த்திக், இந்த படம் முழுக்க முழுக்க சீரியஸாகவே வருகிறார். நடிப்பு மிகச்சுமார்தான் இருப்பினும் இயக்குனர் ஒரளவுக்கு தேற்றிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த படத்தின் கதைக்கு நாயகியே தேவையில்லை. இருப்பினும் தமிழ் சினிமா பார்முலாப்படி டூயட் பாடல்களுக்கு பயன்படுத்தப்படும் நாயகியாக ப்ரியா ஆனந்த் வந்து செல்கிறார். கவர்ச்சியாக இரண்டு பாடல்களுக்கு கவுதமுடன் நடனம் ஆடிவிட்டு சென்றுவிடுகிறார்.

டாப்சி சில நிமிடங்களே வந்தாலும் அசத்தலான மிரட்டலான நடிப்பை தந்துவிட்டு செல்கிறார். மேலும் டேனியல் பாலாஜி, விவேக்,சதீஷ், மனோபாலா, ஆகியோர்களும் உண்டு. கிளைமாக்ஸில் மிகச்சரியான நேரத்தில் வரும் தனுஷ், பலத்த கைதட்டலை பெறுகிறார்.

விறுவிறுப்பான திரைக்கதை அமைந்துள்ள இந்த படத்தில் பாடல்களை தவிர்த்திருக்கலாம். மூன்று பாடல்கள் படத்தின் விறுவிறுப்பை குறைக்கின்றது. யுவனின் பின்னணி இசைதான் உண்மையான படத்தின் நாயகன். சொகுசு கப்பலில் சூதாட்டம் நடைபெறும்போது யுவன் போட்டுள்ள பின்னணி இசை ஹாலிவுட் படங்களுக்கு இணையானது.

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் மற்றும் எடிட்டர் வி.டி.விஜயனுக்கும் ஒரு சபாஷ். டேனியல் பாலாஜி கேரக்டரை கடைசியில் ஏன் டம்மியாக்கிவிட்டார் இயக்குனர் என்பது மட்டுமே ஒரு குறை. மற்றபடி படம் ஓகே.

வை ராஜா வை. ரசிகர்களுக்கு கிடைத்த ரம்மி

Leave a Reply