இளையராஜா – வைரமுத்து கூட்டணியில் 1980களில் காலத்தால் அழிக்க முடியாத இனிமையான பாடல்கள் தமிழ் திரைப்படங்களில் இடம்பெற்றது. அந்த பாடல்கள் இன்றளவும் புகழ்பெற்று விளங்குகிறது. ஆனால் இடையில் சில கருத்துவேறுபாடுகள் காரணமாக இளையராஜாவும், வைரமுத்துவும் தனித்தனியே பணியாற்றுகின்றனர். இந்நிலையில் வைரமுத்து முதன்முறையாக இளையராஜா மகன் யுவன்சங்கர் ராஜாவின் இசைக்கு பாடல்கள் எழுதுகிறார்.
லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘இடம் பொருள் ஏவல்’ என்ற படத்துக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் தேசிய விருது வாங்கிய இயக்குனர் சீனுராமசாமி இயக்குகிறார். விஜய்சேதுபதி, விஷ்ணு இணைந்து இந்த படத்தில் நடிக்கின்றனர்.
தயாரிப்பாளர் லிங்குசாமியின் தனிப்பட்ட முயற்சியின் விளைவாக யுவன்ஷங்கர் ராஜாவும், வைரமுத்துவும் இணைந்திருப்பதாக சீனு ராமசாமி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் கொடைக்கானலில் தொடங்க இருப்பதாக மேலும் அவர் கூறினார்.