வலியவன். திரைவிமர்சனம்

valiyavan100 வருட இந்திய சினிமா வரலாற்றில் ஒரு இயக்குனர் தான் சொல்ல வந்த விஷயத்தை முதல் இரண்டு மணி நேரத்தில் ஒரு வரி கூட சொல்லாமல் கடைசி அரை மணி நேரத்தில் மட்டும் கதையை ஆரம்பித்து பின்னர் கிளைமாக்ஸில் முடித்த படம் அனேகமாக இது ஒன்றாகத்தான் இருக்கும். தயவுசெய்து யாரும் படத்தை முதலில் இருந்து பார்க்க வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக தியேட்டருக்கு செல்ல வேண்டாம். கடைசி அரை மணி நேரம் மட்டும் படம் பார்த்தாலே போதும் உங்களுக்கு கதை புரிந்துவிடும்

ஜெய்யை பார்த்த முதல் பார்வையிலேயே ஆண்ட்ரியா ‘ஐ லவ் யூ’ சொல்கிறார். பின்னர் ஜெய்யை அலையோ அலை என்று அலைய வைத்து கடைசியாக நான் உன்னை காதலிக்க வேண்டும் என்றால் நான் சொல்கிற ஆளை நீ அடிக்க வேண்டும் என்று ஜெய்க்கு ஆண்ட்ரியா கட்டளை இடுகிறார். காதலுக்காக யாரை அடிக்கத்தயார் என்று துணியும் ஜெய்க்கு, தான் அடிக்க போவது தன்னையும் தனது குடும்பத்தையும் அவமதித்த பிரபல குத்து சண்டை வீரர் என்று தெரிந்ததும் வெறித்தனமாக குத்துச்சண்டை பிராக்டீஸ் செய்து கிளைமாக்ஸில் வில்லனை அடித்து வீழ்த்துகிறார் என்பதுதான் கதை. ஆனால் இந்த கதையை சொல்வதற்கு முன்னர் ரசிகர்களை சரவணன் படுத்திய கொடுமையை தாங்க முடியவில்லை.

இதுவரை சாக்லேட் பாயாக காதல் காட்சிகளில் வலம் வந்த ஜெய், முதல்முறையாக ஆக்சன் ஹீரோவாக புரமோஷன் ஆகியுள்ளார். குத்துச்சண்டை வீரர் கேரக்டருக்காக சிக்ஸ்பேக் எல்லாம் வைத்து உண்மையிலேயே ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கின்றார். ஆனால் எல்லாம் விழலுக்கு இறைத்த நீர்.

ஆண்ட்ரியாவுக்கு காஸ்ட்யூம் டிசைனர் செய்தவருக்கு கண்டிப்பாக ஆஸ்கார் அவார்டுதான் கொடுக்க வேண்டும். எந்த வங்கியில் ஒரு இளம்பெண் தொடை தெரிய டிரஸ் போட்டுக்கொண்டு பணிபுரிகிறார் என்பதை அவர்தான் விளக்க வேண்டும். மற்றபடி ஆண்ட்ரியாவுக்கு சொல்லிக்கொள்ளும்படி நடிப்பு என்று ஒன்றுமே இல்லை.

வில்லனாக வருபவர் கொஞ்ச நேரமே வந்தாலும் மிரட்டியுள்ளார். நல்ல நடிப்பு. இந்த படத்தை ஓரளவுக்கு ரசிகர்களை உட்கார்ந்து பார்க்க வைக்கும் காட்சிகள் அழகம்பெருமாள் வரும் காட்சிகளே. நல்ல நடிப்பு. பாராட்டுக்கள்.

டி.இமானின் இசையில் சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லை. இரண்டு பாடல்கள் கேட்கும்படியாக இருந்தாலும், அதை படமாக்கிய விதம் ரொம்ப சுமார்தான். பின்னணி இசையை அருமையாக அமைக்கும் அளவுக்கு காட்சிகள் இல்லாததால் அவரும் பெரிதாக ரிஸ்க் எடுக்கவில்ல.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அரையிறுதியில் இந்திய அணி மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை கொடுத்து சொதப்பலாக தோல்வி அடைந்தது போல், எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி போன்ற விறுவிறுப்பான படங்களை கொடுத்த சரவணனிண்டம் இருந்து இப்படி ஒரு மொக்கையை எதிர்பார்க்கவில்லை. அடுத்த படத்திற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சரவணன்.

வலியவன். தலைவலியை தருபவன்

Leave a Reply