ஊரின் பணக்கார குடும்பத்தை சேர்ந்த விஜய் சேதுபதியும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த கிருஷ்ணாவும் நெருங்கிய நண்பர்கள். எந்த வேலைக்கும் செல்லாமல் ஜாலியாக ஊரை சுற்று வருகின்றனர். இந்நிலையில் கிருஷ்ணா அதே ஊரை சேர்ந்த சுனைனாவை காதலிக்கின்றார்.
இவர்களூடைய காதலுக்கு சுனைனாவின் அண்ணன் மதுசூதனன் எதிர்ப்பு தெரிவிக்கின்றார். ஆனால் கிருஷ்ணா-சுனைனா காதல் தொடர்வதால் ஒருநாள் மதுசூதனன் கிருஷ்ணவை அடிக்கிறார். அப்போது அங்கிருந்த விஜய் சேதுபதி எதிர்பாராதவிதமாக மதுசூதனை கொலை செய்துவிடுகிறார்.
இந்நிலையில் விஜய் சேதுபதிக்கும் கிருஷ்ணாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விடுகின்றனர். இந்நிலையில் மதுசூதனனின் பிசினஸ் எதிரியான ராஜா, மதுசூதனின் குடும்பத்தை அழிக்க முயற்சிக்கிறார். தன்னால் கொலை செய்யப்பட்ட மதுசூதனின் குடும்பத்திற்கு ஆபத்து என்பதை அறிந்த விஜய் சேதுபதி அவர்களுடைய குடும்பத்தை காப்பாற்ற அவ்ர்கலுடனே தங்குகிறார். இந்நிலையில் நண்பர்களின் பிரிவை பயன்படுத்தி கிருஷ்ணாவை தனது வலையில் இழுத்து விஜய் சேதுபதியுடன் மோத வைக்கிறார் ராஜா.
இறுதியில் பிரிந்த நண்பர்களான விஜய் சேதுபதியும் கிருஷ்ணாவும் ஒன்று சேர்ந்தார்களா? கிருஷ்ணா, சுனைனா காதலில் ஜெயித்தார்களா? ராஜாவிடம் இருந்து மதுசூதனனின் குடும்பத்தை விஜய் சேதுபதி காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.
படத்தில் விஜய் சேதுபதி ராதா என்னும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். முதல் முறையாக ஆக்ஷனில் களம் இறங்கிய இவர் தன் நடிப்பால் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார். படம் முழுக்க வெள்ளை சட்டை வெள்ளை வேட்டியுடன் பெரிய மனிதர் தோரணையுடன் வலம் வருகிறார். இவருடைய ஆக்ஷன் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.
படத்தில் கிருஷ்ணா, செல்லதுரை கதாபாத்திரத்தில் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆடல் பாடல் என யதார்த்தமான நடிப்பை காண்பித்திருக்கிறார். நாயகியான சுனைனா நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கிறார். ஆனால், வழக்கமான சினிமா பாணியில் அவரது கதாபாத்திரம் அமைந்துள்ளது.
தமிழ் சினிமாவில் காதலுக்கு மரியாதை கொடுத்த படங்களை விட நட்புக்கு மரியாதை கொடுத்த படங்கள்தான் அதிகம். அந்த வரிசையில் நட்பை கதைக்களமாக வைத்து இந்த படம் உருவாகியிருக்கிறது. முதல் பாதியில் திரைக்கதையில் சிறிது தொய்வு ஏற்பட்டாலும், பிற்பகுதியில் அதனை சரிசெய்து பாராட்டு பெற்றிருக்கிறார் இயக்குனர் ஜெய் கிருஷ்ணா.
தமன் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். பாலா பரணியின் ஒளிப்பதிவை ரசிக்கலாம்.
மொத்தத்தில் ‘வன்மம்’ யதார்த்தம்.