வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த வாமனர்!

LRG_20150828172944423952

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில், திருவோணத்தை முன்னிட்டு வாமனர்  வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்க பகவான் சிறிய உருவில் வாமனராக அவதரித்து பின்னர் உலகளந்த பெருமாளாக விஸ்வரூபம் எடுத்தார். வாமன அவதாரம் எனும் குள்ள வடிவனாக காட்சியளித்த அதேநாளில் திருவிக்கிரம அவதாரம் எனும் உயர்ந்தவராகவம் காட்சியளித்தார். நானே குறுகியதாகவும், அணுவுக்கும் அணுவாகவும் இருக்கிறேன் என்பது வாமன அவதாரம். நானே இப்பூமியில் எல்லாமாகவும் இருக்கிறேன் என்பது திருவிக்ரம அவதார தத்துவம். இவை இரண்டு அவதாரங்களையும் ஒருங்கே அமைந்த திருக்கோவிலூர் பெருமாள் கோவிலில் மூலவராக இருக்கும் உலகளந்த பெருமாள் சன்னதிக்கு பின்புறத்தில் வாமனர் சன்னதி உள்ளது. வாமனர்க்கென தமிழகத்தில் வேறு எங்கும் சன்னதி இல்லாத சிறப்பு பெற்ற இத்தலத்தில், ஆவணி திருவோணத்தை முன்னிட்டு காலை வாமனர்க்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தது. மாலையில் 5:00 மணிக்கு வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சகசரதீபம், தீபபிரதிஸ்டை, விஷ்ணு சகசரநாமம் நடந்தது. ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் தமிழகம் மட்டுமல்லாது பிறமாநிலங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.

Leave a Reply