இந்திய – ஜப்பான் பிரதமர்கள் முன்னிலையில் வாரணாசியை ‘ஸ்மார்ட்’ நகரமாக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
பாரத பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி, 5 நாள் அரசு பயணமாக நேற்று காலை 6 மணிக்கு டெல்லியில் இருந்து கிளம்பி ஜப்பான் நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். சுமார் 1.30 மணியளவில் ஜப்பான் சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
முதலில் கியோட்டோ என்ற நகரில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயை சந்தித்து பேசிய மோடி, ஜப்பானில் சோதனை அடிப்படையில் செயல்பட்டு வரும் ஸ்மார்ட் நகரமான கியோட்டோ நகரை பார்வையிட்டார்.
பின்னர் இந்திய ஜப்பான் பிரதமர்களின் முன்னிலையில் இந்தியாவின் வாரணாசி நகரை ஸ்மார்ட் நகராக ஆக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. ஜப்பானுக்கான இந்திய தூதர் தீபா வாத்வா மற்றும் கியோட்டா மேயர் டாய்சாகா கடோகாவா ஆகியோர் இந்த வரலாறு சிறப்பு வாய்ந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
வாரணாசி நகரின் பாரம்பரியத்தை பாதுகாக்கவும், நகரை நவீனப்படுத்தும் அதே சமயம் அந்நகரின் கலை, கலாச்சாரம் மற்றும் கல்வி ஆகியவற்றில் ஒத்துழைப்பு அளிக்கவும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.