லேத்துப் பட்டறை, டெக்ஸ்டைல் மில், தொழிற்சாலை ஆலைகள் மற்றும் ஐ.டி நிறுவனங்களில் ஷிஃப்ட் மாறி, மாறி வேலை செய்வது மிக இயல்பாக நடைப்பெற்று வருகிறது. காலை, மாலை மற்றும் இரவு என இப்படி மாறி, மாறி ஷிஃப்ட் கணக்கில் வேலை செய்வதனால் உங்களுக்கு நிறையப் பணம் மட்டும் கிடைக்கிறது என்று எண்ணிவிடாதீர்கள் போனஸ் பரிசாய் உடல்நலப் பிரச்சனைகளும் உங்களுக்கு தெரியாமலேயேக் கொடுக்கப்படுகிறது.
ஏதோ கை, கால் வலி, முதுகுப் பிடிப்பு என சாதாரணப் பிரச்சனைகள் என்று நினைக்க வேண்டாம். தூக்கமின்மையில் தொடங்கி, இதயக் கோளாறுகள், நீரிழிவுப் பிரச்னை, புற்றுநோய் வரை இழுத்து செல்கிறது ஷிஃப்ட் மாறி, மாறி வேலை செய்யும் பழக்கம்.
இன்றைய குழந்தைகள் பலர் அவர்களது தாத்தா, பாட்டி முகத்தைப் புகைப்படத்தில் மட்டும் காணும் வழக்கம் அதிகரித்து வர இதுவே காரணம். இது இப்படியேப் போகும் எனில் தாய், தந்தை முகத்தைக் கூடப் புகைப்படத்தில் காட்டும் நாட்கள் மிக விரைவில் விடியும் வாய்ப்புகள் மிக அதிகமாய் இருக்கின்றன…
தூக்கமின்மை : ஷிஃப்ட் மாறி மாறி வேலை செய்வதனால் ஏற்படும் முதல் பிரச்னை தூக்கமின்மை. தூக்கமின்மை அதிகரிக்கும் போது செரோடோனின் அளவு குறைகிறது. இதன் காரணமாய் உங்கள் இரத்த நாளங்கள் சுருங்கும் அபாயம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.
நீரிழிவு நோய் : சாதரான நேரங்களில் வேலை செய்பவர்களோடு ஷிஃப்ட் மாறி வேலை செய்பவர்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ஷிஃப்ட் மாறி வேலை செய்பவர்களுக்கு தான் அதிகமாக நீரிழிவு நோய் ஏற்படுகிறது. ஷிஃப்ட் மாறி, மாறி வேலை செய்யும் போது இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதானால் இந்த அபாயம் ஏற்படுகிறது.
உடல் பருமன் : ஷிஃப்ட் மாறி, மாறி வேலை செய்யும் போது சோம்பேறித்தனம் மற்றும் உடல் சோர்வு அதிகரிக்கிறது. இதனால் உடல் எடை அதிகரிக்கிறது. உடல் எடை அதிகரிப்பதனாலேயே அதிக உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகிறது.
புற்றுநோய் : பெண்களுக்கு புற்றுநோய் அபாயம் அதிகமாகி ஏற்படுகிறது அதிலும் முக்கியமாக மார்பக புற்றுநோயின் தாக்கம். சர்வதேச புற்றுநோய் நாளேடு நடத்திய ஆராய்ச்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் இரவு ஷிஃப்ட் வேலைகளில் பணிப்புரியும் பெண்களுக்கு 30% அதிகமாக மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாய் கூறப்பட்டிருக்கிறது.
வளர்ச்சிதை மாற்றம் : ஷிஃப்ட் மாறி, மாறி வேலை செய்பவர்களுக்கு லெப்டின் அளவு குறைகிறது. லெப்டின் என்பது உங்கள் உடல் எடையை சீரான அளவில் பாதுகாக்க உதவும் சுரப்பி ஆகும். இதன் அளவு குறைவதனால் உடல் எடை அதிகரிப்பது மட்டும் இல்லாது. எதிர்வினை வளர்ச்சிதை மாற்றங்களும் ஏற்படுகின்றன.
இதயக் கோளாறுகள் : இரவு, பகல் என மாறி, மாறி ஷிஃப்ட் வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு மாரடைப்பு அதிகமாக ஏற்படுகிறது என கடந்த 2009 முதல் 2012 வரை தொடர்ந்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் முடிவில் கூறப்பட்டிருக்கிறது.
மன அழுத்தம் : ஷிஃப்ட் மாறி வேலை செய்வதனால் வேறு வேலைகள் அல்லது பொழுதுபோக்குகளில் சரியாக உங்களினால் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. இதன் காரணத்தினால் மன அழுத்தம் அதிகரிக்கிறது. சரியான நேர இடைவேளையில் சரியான அளவு ஓய்வும் தேவை என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.
மனநிலை மாற்றம் : இவ்வாறு ஷிஃப்ட் மாறி, மாறி வேலை செய்வதனால் உங்கள் மனநிலையில் மாற்றம் ஏற்படுகிறது. திடீர் கோபம், திடீர் மகிழ்ச்சி சில சமயங்களில் அளவுக்கு மீறிய உணர்ச்சியின் வெளிபாடு என பல மாற்றங்கள் ஏற்படுகிறது, இதனால் மனநிலைக் கோளாறுகள் ஏற்படும்.