சென்னையின் குடியிருப்பு சார்ந்த ரியல் எஸ்டேட் கடந்த ஆண்டில் இறங்குமுகமாகவே இருந்தது. கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வு, அரசின் வழிகாட்டும் மதிப்பு உயர்வு, தொழிலாளர்களின் ஊதிய உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் இந்தச் சரிவு ஏற்பட்டது. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஓரளவு ரியல் எஸ்டேட் ஏற்றம்பெற்றுள்ளதாகச் சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த வளர்ச்சி முக்கியமானது.
இந்நிலையில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் நைட் ப்ராங்க் அறிக்கை சென்னையின் வர்த்தக ரியல் எஸ்டேட் வரும் ஆண்டில் சிறப்பாக இருக்கும் எனக் கூறுகிறது. முடிவடைந்த 2015 அரையாண்டிலும் வர்த்தக ரியல் எஸ்டேட் சென்னையைப் பொறுத்தவரை ஆரோக்கியமாகவே தொடங்கியதாக அந்த அறிக்கை சொல்கிறது.
சென்னை வர்த்தக ரியல் எஸ்டேட் சந்தை 58.2 மில்லியன் சதுர அடி அளவு பரப்பளவு கொண்டது. அதில் 47.1 மில்லியன் சதுர கிலோ அடி, இதுவரை வர்த்தகப் பயன்பாட்டுக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. 17.9 சதவீதம் வர்த்தக ரியல் எஸ்டேட் பகுதி வெற்றிடமாக, வளர்ச்சிக்கு உகந்த பகுதியாக இருந்தது. இந்த வர்த்தக ரியல் எஸ்டேட் பகுதி மெல்ல உயர்ந்து 24.4 சதவீதமாக ஆகியுள்ளது. இதன் மூலம் வர்த்தக ரீதியான கட்டிடங்கள் கட்டுவது உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு சென்னைக்கு முதலிடம்
சென்னையில் வர்த்தக ரியல் எஸ்டேட்டைப் பொறுத்தவரை தென் சென்னைக்குத்தான் முதலிடம். அதற்கு அடுத்தபடியாக மேற்குச் சென்னைப் பகுதிகள் உள்ளன. தென்சென்னையுடன் ஒப்பிடும்போது கடந்த சில ஆண்டுகளில் மேற்குச் சென்னை குறிப்பிடும்படியான முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த வளர்ச்சியைக் குடியிருப்பு ரியல் எஸ்டேட்டிலும் காண முடியும். அம்பத்தூர், போரூர், ஸ்ரீ பெரும்புதூர் ஆகியவை மேற்குச் சென்னையின் முக்கியமான பகுதிகள். தென் சென்னைப் பகுதிகளில் சோழிங்கநல்லூர், குரோம்பேட்டை, கூடுவாஞ்சேரி பகுதிகளில் வர்த்தக ரியல் எஸ்டேட் சிறப்பாக உள்ளது.
வர்த்தக ரியல் எஸ்டேட்டின் துறைகள்
வங்கிகள், நிதி நிறுவனங்கள், இன்சூரன்ஸ் போன்ற துறை நிறுவனங்கள் பி.எஃப்.எஸ்.ஐ என அழைக்கப்படுகின்றன. இந்த நிறுவனங்களுக்கான அலுவலகம் அமைக்கப்பட்டதன் வாயிலாக வர்த்தக ரியல் எஸ்டேட்டின் 26 சதவீதத்தில் அவை பங்கு கொள்கின்றன. இது கடந்த ஆண்டின் இரண்டாம் அரையாண்டில் 14 சதவீதமாகவும் அதற்கு முதலாம் அரையாண்டில் 13 சதவீதமாகவும் இருந்துள்ளது. இதை வைத்துப் பார்க்கும்போது இந்தத் துறைக்கான வர்த்தக ரியல் எஸ்டேட் ஏற்றம் கண்டுள்ளது.
வங்கிகள், நிதி நிறுவனங்கள், இன்சூரன்ஸ் போன்ற துறை நிறுவனங்கள் பி.எஃப்.எஸ்.ஐ என அழைக்கப்படுகின்றன. இந்த நிறுவனங்களுக்கான அலுவலகம் அமைக்கப்பட்டதன் வாயிலாக வர்த்தக ரியல் எஸ்டேட்டின் 26 சதவீதத்தில் அவை பங்கு கொள்கின்றன. இது கடந்த ஆண்டின் இரண்டாம் அரையாண்டில் 14 சதவீதமாகவும் அதற்கு முதலாம் அரையாண்டில் 13 சதவீதமாகவும் இருந்துள்ளது. இதை வைத்துப் பார்க்கும்போது இந்தத் துறைக்கான வர்த்தக ரியல் எஸ்டேட் ஏற்றம் கண்டுள்ளது.
வர்த்தக ரியல் எஸ்டேட்டில் முதல் பங்களிப்பு செய்யும் துறை ஐடி துறைதான். இது 46 சதவீதப் பங்களிப்பை நல்குகிறது. கடந்த முதலாம் அரையாண்டில் 42 சதவீதமாக இருந்தது. ஆனால் இரண்டாம் அரையாண்டில் இது 54 சதவீதமாக இருந்துள்ளது. ஏற்றயிறக்கங்களுடன் இருக்கும் இந்தத் துறை உள்ளது. ஆனாலும் இது ஆரோக்கியமான நிலைதான் என இந்த அறிக்கை சொல்கிறது.
தயாரிப்புத் துறை வர்த்தக ரியல் எஸ்டேட்டில் மூன்றாவதாகப் பங்கு வகிக்கும் துறை. இந்தத் துறை முடிவடைந்த 2015 முதலாம் அரையாண்டில் 15 சதவீதம் என இந்த அறிக்கை கணக்கிட்டுள்ளது. கடந்த ஆண்டின் கடைசி அரையாண்டின் நிலையிலும் இதே நிலைதான் இருந்தது. ஆனால் முதலாம் அரையாண்டின் இது 25 சதவீதமாக இருந்தது. மற்ற துறைகள் 13 சதவீதப் பங்கை நல்குகின்றன.
இந்திய அளவில் 5-ம் இடம்
சென்னையில் 1.2 மில்லியன் சதுர அடி இடம் வர்த்தக ரியல் எஸ்டேட்டில் விற்பனைக்குத் தயாராக உள்ளது. இன்னும் 2.4 மில்லியன் சதுர அடி அளவில் வர்த்தக ரியல் எஸ்டேட் இடம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. காலியிடங்கள் விற்பனை ஆவதில் இந்தியாவின் மற்ற நகரங்களைவிடச் சென்னை சிறப்பான இடத்தில் உள்ளது. 2015 முடிவடைந்த முதலாம் அரையாண்டில் 9 ஆயிரம் வர்த்தகப் பகுதிகள் விற்பனையாகியுள்ளன. இது இந்திய அளவில் ஐந்தாம் இடம்.