வசந்த நவராத்திரி!

வசந்த நவராத்திரி!

p9a
யா தேவி ஸர்வ பூதேஷூ மாத்ரு ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

– என்று அம்பிகையின் அருமை பெருமைகளைப் போற்றுகிறது தேவி மஹாத்மியம். அகிலத்தின் அனைத்துமாக அம்பிகையே விளங்குகிறாள் என்பதை உணர்த்தும் விழாவே, நவராத்திரி.

கலசத்திலோ கும்பத்திலோ அம்பாளை எழுந்தருளச்செய்து, பலவகையான பொம்மைகளிலும் அவளின் திருவடிவை வழிபட்டு, குழந்தை முதல் மூதாட்டி வரையான பெண்களிலும் அம்பாளையே கண்டு கும்பிட்டு, அவளது அருளை நாடி நிற்கும் நல்விழாவே நவராத்திரி! ஆண்டுக்கு நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்பட்டதாகப் பழைய நூல்கள் தெரிவிக்கின்றன.

அவற்றில் மஹா நவராத்திரி பிரதானமாகக் கொண்டாடப்படுகிறது. அது, சாரதா நவராத்திரி, தேவி சரண் நவராத்திரி, சரத் நவராத்திரி என்ற பெயர்களாலும் அழைக்கப்படும். இது, புரட்டாசி – ஐப்பசி மாதங்களில் வரும்; முறைப்படி, இதை ஆஸ்வின (ஐப்பசி) நவராத்திரி என்பர்.

வசந்த நவராத்திரி பங்குனி மாதத்தில், ஸ்ரீராம நவமியையொட்டி கொண்டாடப்படுகிறது; வசந்த காலத்தில் வருகிறது. ஆஷாட நவராத்திரி ஆடி மாதத்தில் வருகிறது. மக நவராத்திரி மாசி மாதம் கொண்டாடப்படுகிறது.

இவற்றில், ஆஷாட நவராத்திரியும் மக நவராத்திரியும் இப்போது அவ்வளவாகப் பழக்கத்தில் இல்லை என்பதாலும், அம்பிகை உபாசகர்கள் மட்டுமே அநேகமாக இவைகளை கடைப்பிடிப்பதாலும், இவை குப்த நவராத்திரிகள் (மறைவான நவராத்திரிகள்) எனப்படுகின்றன.

சரத் நவராத்திரி காலமும், வசந்த நவராத்திரி காலமும், ‘காலம்’ எனும் தேவதையின் கோரைப் பற்களாகும். இவை, மழைக் காலம் முடிந்து, கோடை தொடங்கும்போது கிருமிகள் அதிகமாகி, நோய் நொடிகள் பரவும் காலமாயிற்றே! இத்தகைய காலங்களில், அம்பிகையைத் தொழுது, அவளருளால் துன்பங்களை வெல்லலாம் என்கிறார் வியாசர்.

வரும் ஏப்ரல் 8-ம் நாள் முதல் வசந்த நவராத்திரி துவங்குகிறது. இந்த புண்ணிய தினங்களில், அருகிலுள்ள ஆலயங்களுக்குச் சென்று அம்பாளுக்கு செவ்வரளி மாலை சார்த்தி, நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபடுவதுடன், அங்கே அனுதினமும் அம்பாளுக்கு நிகழும் ஆராதனைகளைத் தரிசிப்பதால், விசேஷ பலன்கள் கைகூடும். வீட்டிலும் அனுதினமும் சித்ரான்னங்கள் படைத்து, லலிதா சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி முதலான தேவி துதிப் பாடல்களைப் பாராயணம்செய்து வழிபட வேண்டும். இதனால், சர்வ ரோகங்களும் நீங்கும், சகல சம்பத்துகளும் அந்த இல்லத்தில் பொங்கிப் பெருகும்.

Leave a Reply