ஐ.பி.எல் போட்டிகள் நடத்தியதில் ஆயிரக்கணக்கான கோடிகள் முறைகேடுக செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட லலித் மோடிக்கு உதவி செய்ததை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது லலித் மோடிக்கு ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, பத்ம விருதுக்கு பரிந்துரை செய்ததாக வெளிவந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் சச்சின் பைலட் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “கடந்த 2007ஆம் ஆண்டு வசுந்தரா ராஜே முதல்வராக இருந்தபோது, லலித் மோடியின் பெயரை அவர் பத்ம விருதுகளுக்கு பரிந்துரை செய்ததாக உள்ளூர் ஊடகம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது. இந்த தகவல் லலித் மோடிக்கும் ராஜேவுக்குமான நட்புறவை இது மேலும் உறுதிபடுத்துகிறது.
முந்தைய பாஜக ஆட்சியில் ஊழல் நிறுவனமயமாக்கப்பட்டது. இதில் லலித் மோடிக்கு பெரும்பங்கு உண்டு. ராஜஸ்தான் அரசின் செயல்பாடுகளில் லலித் மோடியின் தலையீடு அப்போது இருந்தது.
ஆனால், மத்திய அரசு வசுந்தரா ராஜே மீது எந்தவித நடவடிக்கைகளையும் இதுவரை மேற்கொள்ளாமல் இருப்பது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் ஸ்போர்ட்ஸ் கவுன்சில் செயலராக அப்போது பதவி வகித்தவர் யு.டி.கான். இவர்தான் லலித் மோடியின் பெயரை பத்ம விருதுகளுக்கு பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது. அதாவது 2007-ம் ஆண்டு கிரிக்கெட்டுக்கு லலித் மோடி செய்த வர்த்தகப் பங்களிப்புக்காக பத்ம விருதுகளுக்கு அவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இது பற்றி பிடிஐ கானைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “அப்போதைய கோப்புகளை பார்த்த பிறகே இது பற்றி கருத்து கூற முடியும்” என்று கூறியுள்ளார்.