நிஜமான தமிழச்சியாக ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் நடித்து வியக்க வைத்தவர் வசுந்தரா. இவரின் முதல் படம் போராண்மை. ஐந்து கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தார். சமீபத்தில் வெளியான ‘சொன்னா புரியாது’ நகைச்சுவை படத்தில் ஷிவாவுடன் ஜோடி போட்டு இருந்தார். தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தை பிடித்துவிட வேண்டும் என போராட வருபவர்.
இனி அவருடைய சந்திப்பு:
வீரமான பெண்ணாகவும் நடிக்கிறீர்கள், காமெடியாகவும் நடிக்கிறீர்கள் எப்படி?
எல்லாமே நடிப்பு தானே. என்னாலும் எல்லா கதாபாத்திரங்களையும் செய்ய முடியும் என்பதை நிருபிக்க தான் இது போன்ற கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கிறேன்.
இதுவரை உங்க நடிப்பு பெரிதா பேசப்பட வில்லையே என்ற வருத்தம் உண்டா?
உண்மையா இருக்கு பேராண்மை படத்துக்காக ஸ்டன்ட்ஸ் கத்துக்கிட்டேன். நிறைய சக்தி கொடுத்து, வேலை பார்த்தேன். ஆனா படம் வந்தபிறகு, அந்த ஐந்து பேர்ல ஒரு பெண்ணு நான் என என்னை அடையாளம் காட்டிய போது கஷ்டமாக இருந்தது. அதற்கான அங்கீகாரம் எனக்கு சரியா கிடைக்கல என்ற வருத்தம் இப்பவும் இருக்கு.
ஒவ்வொரு படத்திற்கும் அதிகமான இடைவெளி ஏன்?
நான் நகரத்தில் படிச்சி வளர்ந்த பொண்ணு. கொஞ்சம் புதுசா டிரை பண்ணலாம்னு நடிச்ச படம் தென்மேற்கு பருவக்காற்று. ஆளே மாறிப்போய் கிராமத்து பொண்ணா வந்து நின்றேன். ஆனா அதற்கு பிறகு வந்த எல்லா ரோலும் கிராமத்து கதைதான். போராளி படம் கொஞ்சம் வித்தியாசமான ரோல்னு ஒத்துக்கிட்டு நடிச்சேன். அதையடுத்து துணிகா துணிகா-னு தெலுங்கு படம். பிரபு சார் கூட படத்தில் இருந்தார். அந்த படத்தில் ஒரு நெகட்டிவ் ரோல். தைரியமா ஒத்துக்கிட்டு நடிச்சேன். என் நடிப்பு பேசப்பட்டது. அதையடுத்து சொன்னா புரியாது படம். காமெடி. படம் முழுக்க வர்ற கேரக்டர். என்னை பொறுத்தவரை நிறைய படங்களா நடிக்க வேணாம். தரமான படங்களில் குறைவான எண்ணிக்கையில் நடித்தால் போதும்.
நடிக்க வாய்ப்பு கேட்டு போவீங்களா? வாய்ப்பு தேடி வரும்னு காத்திருப்பீங்களா?
ஒரு நல்ல ரோல், நிச்சயம் பேசப்படுற மாதிரி கதைனு கேள்விப்பட்டா, நான் போய் வாய்ப்பு கேட்பேன். ஆனா, அதைவிட படத்தின் டைரக்டர் இந்த ரோல் வசுந்தரா நடித்தா நல்லா இருக்கும்னு கூப்பிட்டு வாய்ப்பு தந்தா அதை பெருமையா நினைக்கிறேன்.
உங்களுக்கு எந்த மாதிரியான ரோல் செட்டாகும்னு நினைக்கிறீங்க?
எனக்கு சிட்டி லுக் உள்ள ரோல், நல்ல மாடர்ன் கேரக்டர் பளிச்சுனு செட் ஆகும்னு நினைக்கிறேன். அதைத்தான் நானும் விரும்பறேன்.
எந்த இயக்குனர்கள் படங்களில் நடித்து, உங்கள் திறமையை வெளிக்காண்டுவர ஆசைப்படுறீங்க?
கௌதம் மேனன், மணிரத்னம் படங்களில் நடிக்கனும். இவங்க படங்களில் ஹீரோயின்களுக்கு ரொம்ப முக்கியத்துவம் இருக்கும். நடிப்புக்கும் நல்ல சவாலா இருக்கும்.
கவர்ச்சி பற்றி உங்கள் கருத்து?
கண்டிப்பா நடிப்பேன். ஆனா அது கொஞ்சம் டீசன்டா இருக்கனும். காட்சிக்கு தேவையான கிளாமர் பயன்படுத்தலாம். ஆனா, பார்க்கும்போது அறுவறுப்பு ஆகிடக்கூடாது.
நிஜத்தில் உங்கள் சுபாவம் எப்படி?
நான் கொஞ்சம் கூச்ச சுபாவம். செட்ல கூட யார்கிட்டயும் பேசமாட்டேன். என் ஷாட் முடிந்ததும் புக்ஸ், லேப்டாப், ஐ பேடு இப்படி ஏதாவது ஒன்னோட தனியா உட்கார்ந்து நேரத்தை செலவழிப்பேன். அதிகமாக பேசமாட்டேன். பிரபு சார் கூட அட்வைஸ் பண்ணார். எல்லார்கிட்டயும் சகஜமா பேசனும் என்று. சோ, கொஞ்சம் என்னை மாத்திக்கிட்டு புது வசுந்தராவா, சீக்கிரம் வந்து நிக்கப்போறேன் என்று சிரித்தபடி விடைபெறுகிறார் வசுந்தரா.