வட்டிக் குறைப்பு யாருக்குச் சாதகம்?

home_2288371f

அண்மையில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதங்களைக் குறைத்தது. அதுவும், அடுத்த மாதம் நிதிக் கொள்கை அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே இந்த வட்டி விகிதக் குறைப்பு அமலுக்கு வந்திருக்கிறது. ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படும்போதெல்லாம் வங்கிகளில் வட்டி விகிதமும் குறைக்கப்படுவது வழக்கம். இப்போது ரிசர்வ் வங்கி குறைத்துள்ள ரெப்போ வட்டி விகிதம் வீட்டுக் கடன் வாங்கியவர்களில் யாருக்குச் சாதகம்? ரிசர்வ் வங்கி குறைக்கும் ரெப்போ வட்டி விகிதத்துக்கும், வங்கிகளில் குறைக்கப்படும் வட்டி விகிதத்துக்கும் என்ன தொடர்பு?

இருபது மாதங்களுக்குப் பிறகு

கடந்த டிசம்பர் மாதத்தில் நிதிக் கொள்கையை ரிசர்வ் வங்கி அறிவித்தது. அப்போது ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று வீடு கட்டுபவர்கள் மட்டுமல்ல, வங்கிகள், தொழில் துறையினர், கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், டிசம்பர் மாதத்தில் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படவில்லை.

அதற்குப் பணவீக்கத்தை ரிசர்வ் வங்கி காரணமாகக் கூறியது. நிதியமைச்சர் உள்பட பல தரப்பினரும் ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்குக் கோரிக்கை விடுத்து வந்தார்கள்.

இதனையடுத்து அண்மையில் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. அதுவும் 20 மாதங்கள் கழித்து முதல் முறையாக இப்போதுதான் குறைக்கப்பட்டுள்ளது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் பணவீக்கம் கட்டுக்குள் இருந்ததால் இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அதன்படி 0.25 சதவீத அளவுக்கு ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வந்தது.

வட்டிக் குறைப்பு

ரிசர்வ் வங்கி பெறும் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால், வங்கிகள் பயனடையும். இந்தப் பயனை வங்கிகளில் கடன் வாங்குபவர்களும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட கடன்களை வங்கிகள் குறைக்கும். ரிசர்வ் வங்கியின் அறிவிப்பையடுத்து யூனியன் வங்கி, யுனைடெட் வங்கி ஆகியவை உடனடியாகக் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைப்பதாக அறிவித்தன.

இன்னும் பிற பொதுத்துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும் வட்டி விகிதத்தைக் குறைக்கப் பரிசீலித்து வருகின்றன. இந்த வட்டி விகிதம் குறைப்பு என்பது வங்கிக்கு வங்கி வித்தியாசப்படும். வங்கிகளின் வட்டி விகிதம் குறைப்பு வீட்டுக் கடன் வாங்கியவர்களில் யாருக்குச் சாதகமாக இருக்கும்?

யாருக்குச் சாதகம்?

“ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு என்பது கட்டுமானம் மட்டுமல்ல, தொழில்துறையின் வளர்ச்சிக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் நன்மை அளிக்கக்கூடியது. ரெப்போ வட்டி விகிதம் குறையும்போது வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்களை வங்கிகள் உடனே குறைக்கும். வட்டி குறைந்தால் இ.எம்.ஐ.-யில் செலுத்தும் தொகையும் குறையும். ஆனால், இது வீட்டுக் கடன் வாங்கிய எல்லோருக்குமே பொருந்திவிடாது. வீட்டுக் கடனை மாறுபடும் வட்டி விகிதத்தில் (ஃப்ளோட்டிங் ரேட்) வாங்கியிருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

மாறுபடும் வட்டி விகிதம் என்பது வட்டி குறைந்தாலும் உயர்ந்தாலும் மாறிக் கொண்டே இருக்கும். இன்னும் சிலர் நிலையான வட்டி விகிதத்தில் (ஃபிக்ஸ்டு ரேட்) வீட்டுக் கடனை வாங்கியிருப்பார்கள். அவர்களுக்கு இந்த வட்டிக் குறைப்பு பொருந்தாது. வங்கியாகப் பார்த்து முடிவு செய்தால் வட்டியைக் குறைக்கலாம்” என்கிறார் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஓய்வு பெற்ற துணைப் பொதுமேலாளர் ஆர்.கோபாலகிருஷணன்.

ரியல் எஸ்டேட் துறையைப் பொறுத்தவரை, ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் மிகவும் குஷியாவார்கள். காரணம், இதனையடுத்து வங்கிகள் வட்டி விகிதங்களை உடனே குறைக்கும். வங்கிகளில் வட்டி விகிதங்கள் குறைந்தால், சொந்த வீடு வாங்கும் கனவில் உள்ளவர்கள் அதற்கான முயற்சியில் இறங்குவார்கள். வீட்டுக் கடனுக்காக வங்கிகளை அணுகுவார்கள். வீட்டுக் கடன் அளிப்பதும் அதிகரிக்கும். வீடு வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்கிறார்கள் ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்கள்.

மீண்டும் வாய்ப்பு?

இதற்கிடையே அடுத்த மாதம் 3-ம் தேதி நிதிக் கொள்கை மற்றும் கடன் கொள்கையை ரிசர்வ் வங்கி அறிவிக்க உள்ளது. அப்போது மீண்டும் வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது என்கிறார் ஆர். கோபாலகிருஷ்ணன். “நவம்பர், டிசம்பரைத் தொடர்ந்து ஜனவரியிலும்கூடப் பணவீக்கம் கட்டுக்குள்ளேயே இருக்கிறது. எனவே ரெப்போ வட்டி விகிதத்தை இன்னும் குறைக்க வாய்ப்பு இருக்கிறது.

தற்போது 7.75 சதவீதமாக உள்ள வட்டி விகிதம் இந்த ஆண்டுக்குள் 7 சதவீதம் என்ற அளவுவரை குறையலாம் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. அப்படிக் குறைந்தால் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்குப் பெரும் பயன் கிடைக்கும்” என்கிறார் அவர்.

வீடு வாங்க உத்தேசித்துள்ளவர்கள் இப்போது முயலலாமே!

Leave a Reply