சசிகலா முன் கைகட்டி நின்றது ஏன்? பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மீது விசாரணையா?
மறைந்த முதல்வர் ஜெயலலிதா முன் இதுவரை அதிகாரிகளும் அமைச்சர்களும் பவ்யமாக கைகட்டி நின்றனர். அவர் ஒரு முதல்வர் என்பதால் ஒரு மரியாதை என்பதை ஏற்று கொள்ளலாம். ஆனால் எந்தவித அரசு பதவியிலும் இல்லாத ஒரு தனிப்பட்ட நபரான சசிகலா முன் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பணிநேரத்தில் அவர் முன் கைகட்டி நின்றது ஏன்? என்பது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இது குறித்து, ‘மாற்றம் இந்தியா’ அமைப்பின் இயக்குனர், பாடம் நாராயணன் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் துணை வேந்தர்கள், தங்கள் நேரத்தை வீணாக்கி, ஒரு தனி நபர் இல்லத்திற்கு சென்று, அவரை சந்தித்துள்ள விதம் வேதனைக்குரியது.
துணைவேந்தர்களின் பணி நியமனம் எப்படி நடந்துள்ளது, யார் பின்னணியில் இருந்தனர் என்பதை, இச்சம்பவம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இது குறித்து, பல்கலைகளின் வேந்தரான கவர்னர் விசாரணை நடத்தி, துணை வேந்தர்கள், அவர்களை இயக்கிய, உயர் கல்வி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை துணைவேந்தர், பாஸ்கரன்; தமிழ்நாடு டாக்டர்எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை, கீதாலட்சுமி; அன்னை தெரசா பல்கலை, வள்ளி; திருச்சி பாரதிதாசன் பல்கலை, முத்துக்குமார்; பாரதியார் பல்கலை, கணபதி, திருவள்ளுவர் பல்கலை, முருகன்; உடற்கல்வி
பல்கலை, மூர்த்தி; தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை, தங்கசாமி; தமிழ்நாடு கால் நடை மருத்துவ பல்கலை, திலகர் ஆகியோர் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் சென்னை பல்கலை பதிவாளர், மனோன்மணியம் சுந்தரனார், சேலம் பெரியார் பல்கலை துணை வேந்தர்கள் கார்டன் செல்ல மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.