வாத நாராயணன் கீரையானது கைப்புச் சுவையை உடையதாயினும் மிகவும் சுவையான கீரையாகும். மலச்சிக்கலைப் போக்கக் கூடியது. வாத நோய்களுக்கும் மூட்டு வலிகளுக்கும் சிறந்த ஒரு கீரையாகும். வாத நோயை நீக்குவதனால் இக்கீரையானது இக்காரணப் பெயரைப் பெற்றுள்ளது. செரிப்பாற்றலை மிகுவிக்கும்.
உடலுக்கு வலுவூட்டக் கூடியது. இது ஒரு மர வகையைச் சார்ந்தது. இதனுடைய தாவரவியற் பெயர் Delonix elata ஆகும். இதன் இலையை சிற்றாமணக்கு நெய் விட்டு வதக்கி வீக்கங்களுக்கும் கட்டிகளுக்கும் ஒத்தடமிடலாம். இலைச்சாறும் ஆமணக்கு நெய்யும் ஓரளவு கூட்டிக் காய்ச்சி வடிகட்டி 25 முதல் 50 கிராம் வரையிலும் உள்ளுக்குக் கொடுக்க நன்றாக கழியும், பெருகிய வழிக் குற்றம் தன்னிலைப்படும்.
100 கிராம் கீரையிலுள்ள சத்துக்கள் :
சக்தி –98 கி.கலோரி, புரதம் –7.7 கிராம், கொழுப்பு – 1.1 கிராம், கால்சியம் – 299 மில்லி கிராம், பாஸ்பரஸ் –99 மில்லி கிராம், இரும்பு –8.9 மில்லி கிராம்.
வாத நாராயணன் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து கசாயமாக்கி சாப்பிட்டால் மூட்டு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி போன்றவை குணமாகும். வாத நாராயணன் கீரையை பூண்டு சேர்த்து அவித்து சாப்பிட்டால் வாயு பிரச்சினை குணமாகும்.
வாத நாராயணன் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து பூண்டு (2 பல்) சுண்டைக்காய், பெருங்காய், விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி அரைத்து சாப்பிட்டால் முடுக்கு வாதம் குணமாகும்.
வாத நாராயணன் கீரையை உலர வைத்து அதனுடன் அரிசித் தவிடு, புறா எச்சம் இரண்டையும் சேர்த்து வறுத்து துணியில் வைத்து கட்டி ஒத்தடம் கொடுத்தால் பக்கவாதம் குணமாகும்.
வாத நாராயணன் கீரையை கேழ்வரகு மாவில் சேர்த்து தோசை செய்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி, இடுப்பு வலி குணமாகும்.
வாத நாரயணன் கீரையை, வெள்ளை வெங்காயம் இரண்டையும் ஆமணக்கு எண்ணைய் சேர்த்து அரைத்து எலுமிச்சம் பழம் அளவுக்கு சாப்பிட்டால் இரண்டு, மூன்று முறை பேதியாகி வாதம் தணியும். கால் மூட்டு இடுப்பு மற்றும் தண்டுவடம் பிரச்சினைளும் தீரும்.
வாத நாராயணன் கீரையை காய வைத்து பொடி செய்து 5 கிராம் பொடியை சுடுநீரில் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வாயுத்தொல்லை தீரும்.
வாத நாராயணன் கீரையை நன்றாக அரைத்து வெண்ணைய் சேர்த்து நகசுத்தி மீது வைத்து துணியால் கட்டிக்கொண்டால் மூன்றே நாளில் நகசுத்தி குணமாகும்.
வாத நாராயணன் கீரை மற்றும் வேர்ப்பட்டையை நன்றாக அரைத்து தண்ணீரில் கலந்து குடித்தால் வாதநோய் குணமாகும்.