வீடுகளை இப்போது வாங்கலாமா?

veedu_2445534f

இந்தியா முழுவதும் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் விற்பனை ஆகாமல் இருப்பதாகப் பல்வேறு கட்டுமான நிறுவனங்களின் ஆய்வறிக்கைகள் தொடர்ந்து கூறி வருகின்றன.

இன்னொரு புறம் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் மூலம் வீடுகளும் விற்பனை செய்யப்படுகின்றன. இன்றைய நிலையில் ரியல் எஸ்டேட் துறையில் நிலவிவந்த மந்தநிலை விலகி விட்டதா, இல்லையா?

இந்தக் கேள்விக்கு விடை காண, ரியல் எஸ்டேட் துறையில் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் நிறுவனங்களின் புள்ளி விவரங்களை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. அண்மையில் வெளியான ஒரு ஆய்வறிக்கையில், சென்னையில் கட்டி முடிக்கப்பட்டு விற்பனைக்காகக் காத்திருக்கும் வீடுகளை, முழுமையாக விற்க 36 மாதங்கள் பிடிக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. அதாவது, 3 ஆண்டுகள் என்பது வீடு வாங்கப் போகும் வாடிக்கையாளருக்குச் சாதாரணமாகத் தெரியலாம்.

அதாவது, இன்றைய தேதியில் புதிய வீடுகள் எதுவும் சென்னையில் கட்டப்படாமல், ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை மட்டும் விற்பனை செய்யத்தான் இந்த 36 மாத அவகாசம் என்பதன் மூலம் தேக்க நிலை முன் எப்போதையும் விட அதிகரித்துள்ளதாகவே கருத முடிகிறது.

பொதுவாக, ஒரு நகரில் ரியல் எஸ்டேட் துறை எப்படி இருக்கிறது என்பதை Inventory எனப்படும் காரணியை வைத்துதான் கணிக்க முடியும்.

இங்கு Inventory எனப்படுவது, கட்டி முடிக்கப்பட்டுத் தயாராக இருக்கும் வீடுகளை, விற்பனை செய்ய எவ்வளவு கால அவகாசம் பிடிக்கும் என்பதன் அளவீடு. 12 முதல் 14 மாத கால அளவில் Inventory இருக்கும் போதுதான், அது ரியல் எஸ்டேட் துறையின் ஆரோக்கியமான வளர்ச்சியாக கருத முடியும். ஆனால், சென்னை ரியல் எஸ்டேட் துறையின் தற்போதைய Inventory காலம் 36 மாதங்கள் என்றால், ரியல் எஸ்டேட் துறை இன்னும் முழுமையாக மந்த நிலையில் இருந்து விலகவில்லை என்றுதான் அர்த்தம்.

எனவே, புதிதாக வீடு வாங்க விரும்புவர்கள் மற்றும் அதற்கான முயற்சியில் இருப்பவர்கள், வீட்டின் விலையை நிர்ணயிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தினால், நியாயமானது மட்டுமல்ல, குறைந்த விலையில்கூட வீடுகளை வாங்க முடியும் என்பதுதான் நிதர்சமான உண்மை. இதற்குப் பின்னணிக் காரணமும் வலுவாக இருக்கிறது.

பல லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டு விற்பனைக்கு தயாராக இருக்கும் வீடுகளை, கட்டுமான நிறுவனங்கள் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் பூட்டிவைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியும்? மிகப்பெரிய பன்னாட்டு கட்டுமான நிறுவனங்களாக இருந்தால், அதனால் பொருளாதார ரீதியாக இந்த வகை இழப்பை ஓரளவு ஈடுகட்டிக் கொள்ள முடியும்.

ஆனால், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கட்டுமான நிறுவனங்கள், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளைப் பூட்டி வைத்திருக்க விரும்புவதில்லை. மாறாக, அந்த வீட்டை விற்றால் கிடைக்கக் கூடிய லாபத்தின் அளவைக் குறைத்துக்கொண்டு, அதனை விற்பனை செய்யவே முன்வருகின்றன. இதன் காரணமாகத்தான், கடந்த சில மாதங்களாக, குறைக்கப்பட்ட விலையில் புதிய வீடுகள் விற்பனை செய்யப்படுவதாக வெளிவரும் அறிவிப்புகளும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன.

இது ஒருபுறம் இருக்க, கட்டி முடிக்கப்பட்ட, விற்பனையாகாத வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதால், ரியல் எஸ்டேட் துறையில் உள்ள நிறுவனங்களும், புதிதாகக் கட்டும் வீடுகளின் எண்ணிக்கையைக் குறைக்கத் தொடங்கியிருக்கின்றன.

இதனால் கடந்த காலாண்டில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், கட்டப்பட்டு வரும் புதிய வீடுகளின் ஒட்டுமொத்தப் பரப்பளவு 34.8 லட்சம் சதுரடியாகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில், கடந்த காலாண்டில், 52.7 லட்சம் சதுரடி அளவுள்ள வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, புதிய வீடுகளின் கட்டுமானத்தைவிட ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் இருக்கும் வீடுகளின் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

பொதுவாக எந்த ஒரு பொருளின் உற்பத்தி அளவும், அதன் விற்பனை அளவைவிடக் குறைந்தால், அந்தப் பொருளின் விலை அதிகரிக்கும் என்பதுதான் பொதுவான நியதி. ஆனால், ரியல் எஸ்டேட் துறையைப் பொறுத்தவரை, ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டுத் தயாராக இருக்கும் வீடுகளின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துவிட்டதால், புதிதாக வீடுகள் கட்டுவதைக் குறைத்துக் கொண்டு, ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்டு விற்பனைக்குத் தயார் நிலையில் இருக்கும் வீடுகளை விற்பனை செய்ய, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளன.

இதன் ஒரு பகுதியாகவே தற்போது கவர்ச்சிகரமான அறிவிப்புகள் மூலம் வீடுகள் விற்பனையும் களைகட்டத் தொடங்கியிருக்கிறது.

எனவே, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, நியாயமான விலையில் வீட்டை வாங்குவதா? அல்லது இன்னும் சிறிது காலம் காத்திருந்தால், தற்போதைய விலையைவிடக் குறைந்த விலை வீடுகளை வாங்க லாமா? என்பதைப் புதிதாக வீடு வாங்கத் திட்டமிட்டு வருபவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

Leave a Reply