வீட்டை அழகாகக் கட்டுவதைக் காட்டிலும் கட்டிய வீட்டை அலங்கரிக்கப்பது அவசியம். அப்போதுதான் முழுமையான அழகு வீட்டுக்குக் கிடைக்கும். வீட்டு அலங்காரம் என்றதும் செலவு அதிகம் ஆகும் என நினைக்க வேண்டாம். புதுமையான சிந்தனைகள் இருந்தாலேயே போதுமானது. வீட்டைக் கண்ணைக் கவரும் வகையில் மாற்றலாம்.
வீட்டை அழகுபடுத்தும் பொருள்களுள் பூ ஜாடிகளுக்கு முக்கியப் பங்குண்டு. பூஜாடிகளில் பிளாஸ்டிக் பூக்களை இட்டு அழகாக வைக்கலாம். வீட்டின் வரவேற்பறையில், புத்தக மேஜையில் வைக்கலாம். கண்ணாடி ஜாடிகளில் தண்ணீர் நிரப்பி நிஜப் பூக்களையும் வைக்கலாம். அப்படிவைக்கும்போது பூக்களின் மீது சிறிது தண்ணீர்த் தெளித்து வைக்கும்போது பார்வைக்குக் குளிர்ச்சியாக இருக்கும். வீட்டுக்கு அழகைத் தரும். வீட்டுக்குள்ளேயே வளரும் குரோட்டன் வகை தளிர்களையும் வளர்க்கலாம். தாவரப் பச்சை கண்ணுக்கும் மனதுக்கும் குளுமையைத் தரும்.
வீட்டின் வரவேற்பறையில் இனிய நினைவூட்டும் உங்கள் குடும்பப் புகைப்படங்களை மாட்டி வைக்கலாம். புகைப்படங்களை வைப்பதற்கான பலவிதமான போட்டோ ஃப்ரேம்கள் இப்போது சந்தைகளில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி மாட்டலாம். உங்கள் தாத்தா, பாட்டியின் புகைப்படங்களை அழகான ஃப்ரேம்களில் இட்டு மாட்டலாம். இல்லை எனில் அழகான ஓவியங்களை உங்கள் வீட்டின் வண்ணத்திற்கேற்பத் தேர்வுசெய்து மாட்டலாம்.
வீட்டின் வரவேற்பறையில் உள்ள சோபாக்களில் அழகான வண்ணங்களில் குஷன் களை இடலாம். இது வீட்டை ஆடம்பர, அழகான இல்லமாகக் காட்டும். படுக்கையறையையும் மெத்தைகள் மீதும் அழகான குஷன்களை ஆங்காங்கு வைத்து அலங்கரிக்கலாம்.
முக்கியமான மற்றொரு விஷயம் திரைச்சீலைகள். ஜன்னல்கள், அறையின் வாசல்களுக்குப் பொருத்தமான திரைச் சீலைகளைத் தேர்வுசெய்தாலேயே வீட்டுக்குப் பாதி அழகு வந்துவிடும். தரைக்கு அழகான விரிப்புகளைப் பயன்படுத்தலாம்.