ஒரு வீட்டின் உறுதித்தன்மையை மேம்படுத்துவது, அதனைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் சிமெண்ட், செங்கல், கம்பி, மணல் ஆகியவைதான். ஆனால், துரதிருஷ்டவசமாக இவை அனைத்தும் கண்ணுக்குப் புலப்படாத விஷயங்களாக மாறிவிடுகின்றன. பல மாத உழைப்புக்குப் பின்னர் வீட்டைக் கட்டி முடித்து, அதற்கு வண்ணங்களைப் பூசி விட்டால், கட்டுமானப் பொருட்கள் எல்லாம் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விடும்.
வீட்டை அழகுபடுத்தும் டைல்ஸ், பர்னிச்சர்கள், மின்சாதனப் பொருட்கள் ஆகியவைதான் பார்வையாளர்களுக்கும், வீட்டின் உரிமையாளருக்கும் அந்த வீட்டைப் பற்றிய மதிப்பை அதிகரிக்கச் செய்யும். அந்த வகையில், ஒரு வீட்டிற்கு அத்தியாவசிய தேவையாக மாறி விட்டது டைல்ஸ். பொதுவாக, டைல்ஸ் ரகத்தில் பல வகைகள் உண்டு. செராமிக், நேச்சுரல் ஸ்டோன், கிளாஸ், மொசைக் மற்றும் போர்சிலின் ஆகிய இந்த ரகங்கள் அதிகம் பயன்படுத்தப்படுபவை.
வீட்டைக் கட்டும்போதே எந்தெந்தப் பகுதிக்கு என்ன மாதிரியான டைல்ஸ்களைத் தேர்வு செய்ய வேண்டும் என முடிவெடுப்பது வீட்டின் அழகை மட்டுமின்றி, அதில் வசிக்க உள்ள குடும்பத்திற்கான வசதியையும் அதிகரிக்கும். பொதுவாக வரவேற்பறையில் பயன்படுத்துவதற்கு அதிக ஸ்திரத்தன்மையும், நீடித்த ஆயுளும் கொண்ட டைல்ஸ் ரகங்களைத் தேர்வு செய்வதே சிறந்த முடிவாக இருக்கும். அந்த வகையில் போர்சிலின் (Porcelain) ரக டைல்ஸ் மிகச் சரியான தேர்வாக அமைகிறது.
போர்சிலின் டைல்
போர்சிலின் ரகத்திற்கும் செராமிக் டைல்ஸ் ரகத்திற்கும் இடையே உள்ள குணாதிசயத்தில் குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள் உள்ளன. ஆனால், இவை இரண்டும் ஒன்றுதான் எனப் பலரும் தவறாகக் கருதுகின்றனர். போர்சிலின் ரக டைல்ஸ், செராமிக்கை விட விலை அதிகமானது. தரத்திலும், செராமிக்கைவிடச் சிறந்தது. தண்ணீரைக் குறைவாக உறிஞ்சும் திறன் கொண்டது என்பதால் அதில் நடப்பவர்கள் எளிதில் வழுக்கி விழ மாட்டார்கள். எனவே, குளியலறைக்கும் இந்த வகை டைல்ஸ்களைப் பயன்படுத்தலாம்.
கிளாஸ் டைல்
இந்த வகை டைல்ஸ் ஈரத்தை உறிஞ்சாது என்பதால், குளியலறை களில் பயன்படுத்த ஏற்றது. சுத்தப்படுத்து வதும் எளிதானது என்பதால், பலரும் இதனைச் சமையலறையை அலங்கரிக்கவும் பயன்படுத்துகின்றனர். கிளாஸ் டைல்ஸ் ரகத்தின் சிறப்பம்சம், வாடிக்கையாளர் விரும்பும் வண்ணத்தில், ஓவியங்கள் அல்லது உருவங்களை எளிதாக உருவாக்கிவிட முடியும் என்பதுதான். எனவே, சமைய லறை மற்றும் குளியலறையை அலங் கரிக்க விரும்புபவர்களின் முதன்மை தேர்வாக இருக்கிறது கிளாஸ் டைல்ஸ்.
செராமிக் ரக டைல்
செராமிக் ரக டைல் விலை குறைவானது. அதே சமயம் வீட்டின் அழகை மெருகேற்றும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. போர்சிலின் டைல்ஸ் அளவுக்கு ஈரத்தை உறிஞ்சாத தன்மை இல்லாவிட்டாலும், சமையலறை, குளியலறையில் பயன்படுத்த முடியும். பூஜை அறையின் பக்கவாட்டுச் சுவர்களிலும் இதனைப் பயன்படுத்தலாம். குறைவான விலையில் கிடைக்கும் என்பதால் பட்ஜெட் வீடுகள் பலவும் அதிகம் பயன்படுத்தும் டைல்ஸ் வகையாக செராமிக் ரகம் திகழ்கிறது.
நேச்சுரல் ஸ்டோன் ரக டைல்
நேச்சுரல் ஸ்டோன் ரக டைல் பார்ப்பதற்கு மிகவும் எளிமையாகக் காட்சியளிக்கக் கூடியது. ஆனால், நீடித்து உழைக்கக் கூடியது என்பதால், வீட்டிற்குள் மட்டுமின்றி, வெளிப்புறப் பகுதிகளிலும் அதாவது வீட்டின் சுற்றுச்சுவரை ஒட்டிய நடைபாதை, தோட்டத்திற்கான வழித்தடம் ஆகியவற்றில் பயன்படுத்த ஏற்றது. நடுத்தர விலைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்த நேச்சுரல் ஸ்டோன் டைல்ஸ் அதிக வெப்பம் அல்லது பனிப்பொழிவைத் தாங்கி நிற்கும் என்பதால், இதன் ஆயுட் காலம் மற்ற ரக டைல்ஸ்களை விட அதிகம்.
ஆனால், இயற்கையான முறையில் உருவாக்கப்படுவதால், இந்த ரக டைல்ஸ்களில் உருவ அல்லது நிற ஒற்றுமை பெரும்பாலும் இருக்காது. ஒவ்வொரு டைல்ஸும் தனித்தனி குணாதிசயங்களைக் கொண்டது போல் காட்சியளிக்கும்.
கண்ணாடியைப் போன்று வழுவழுப்பான தன்மை உடையதாகத் திகழும் நேச்சுவரல் ஸ்டோன் டைல்ஸை, சொர சொரப்பான தன்மை உடையதாகவும் மாற்ற முடியும் என்பதால், எந்தக் காரணத்திற்காக வாங்கப்படுகிறது என்பதை முதலிலேயே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். உதாரணமாகக் குளியலறைக்குப் பயன்படுத்தும்போது சொரசொரப்பான நேச்சுரல் ஸ்டோன் டைல்ஸைப் பயன்படுத்துவதே சிறந்தது.
மொசைக் டைல்
மொசைக் டைல் வகைகள் பண்டைய காலம் முதலே பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு ரகமாகும். வீட்டின் உள்ளே இயற்கைக் காட்சிகள் அல்லது ஓவியங்களை மாட்டி வைப்பதற்குப் பதிலாக, சுவரில் பதிக்கும் கற்கள் மூலமாகவே அதனை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டதுதான் மொசைக் டைல்ஸ். காலச் சுழற்சி மற்றும் தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் காரணமாக மொசைக் டைல்ஸ் தயாரிப்பிலும் மாற்றம் ஏற்பட்டு விட்டது.
இந்த வகை டைல்ஸ்கள் வழுக்கும் தன்மை உடையவை என்பதால், குளியலறையின் தரைப்பகுதிக்கு இவற்றைப் பயன்படுத்துவது ஏற்றதல்ல. அதே நேரத்தில் பூஜையறை யில் கடவுள் படங்களை ஓவியம் போல் வடிவமைக்கவும், சமையலறையில் இயற்கை காட்சிகளை உருவாக்கவும் இந்த மொசைக் டைல்ஸ் ஏற்றவை.
தற்போது மொசைக் டைல்ஸின் அடுத்த கட்ட முன்னேற்றமான போட்டோ பிரிண்டட் டிஜிட்டல் டைல்ஸ் சந்தைக்கு வந்துவிட்டது. ஒரு புகைப்படத்தை பிரிண்ட் செய்தால் எப்படித் துல்லியமாக கிடைக்குமோ அதே போல், உங்கள் வீட்டு சுவரிலும் அதன் உருவத்தைப் பதிவு செய்து விடலாம். குழந்தைகளுக்கான அறையில் அவர்களின் புகைப்படத்தை மாட்டி வைப்பதற்குப் பதிலாக அதனை போட்டோ பிரிண்டட் டிஜிட்டல் டைல்ஸ் மூலம் சுவராகவே உருவாக்கி விடலாம்.
ஸ்டெய்ன் ஃப்ரீ டைல்
வீட்டின் சமையலறைக்குப் பயன்படுத்த உகந்த வகையில் ஸ்டெய்ன் ஃப்ரீ டைல்ஸ் ரகங்களும் சந்தையில் உள்ளன. காபி கொட்டினாலும், எண்ணெய் சிந்தினாலும் இந்தவகை டைல்ஸ்களை எளிதாகச் சுத்தப்படுத்தி விடலாம் என்பதால், விஷயமறிந்தவர்கள் இந்த டைல்ஸைச் சமையலறைக்கு என்றே பிரத்யேகமாகத் தேர்வு செய்கின்றனர்.
இவற்றைத் தவிர ஸ்கிராட்ச் ஃப்ரீ டைல்ஸ் ரகங்களும் வாடிக்கையாளர்களின் கவனத்தைப் பெற்று வருகின்றன. வரவேற்பறை அல்லது வீட்டின் ஹாலில் அதிக எடையுள்ள சோபா போன்ற பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்தும்போது டைல்ஸ்களில் கீறல் விழுவதைத் தவிர்க்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது இந்த ஸ்கிராட்ச் ஃப்ரீ டைல்ஸ்.
புதிதாக வீடு கட்டுபவர்கள் மட்டுமின்றி, பழைய வீட்டை நவீன வசதிகளுடன் புதுப்பிக்க விரும்புவர்களும் டைஸ்ல் வகை களைத் தான் அதிகம் விரும்புகின்றனர். டைல்ஸின் தரம் மற்றும் தன்மையைப் பொறுத்து 15 முதல் 20 ஆண்டுகள் வரை தாக்குப்பிடிக்கும்.