ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை தொடர்பாக ரியல் எஸ்டேட் கட்டுமானர் சங்கங்களின் கூட்டமைப்பு (Confederation of Real Estate Developers’ Associations of India) அதிருப்தி தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி தனது நிதிக் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவித்துள்ளது. நாட்டின் கட்டுமான அதிபர்களின் உயரிய அமைப்பான ரியல் எஸ்டேட் கட்டுமானச் சங்கங்களின் கூட்டமைப்பு இந்த நிதிக்கொள்கை அறிவிப்பால் அதிருப்தி அடைந்துள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் வீட்டுக்கடன் வட்டி விகிதம் குறைக்கப்பட வேண்டும் எனவும் அது கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக இந்தக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த அதிருப்தியும் கோரிக்கையும் இடம்பெற்றுள்ளன.
பணவீக்கத்தால் பாதிக்கப்படாத வீட்டுக் கடன் வட்டி விகிதம், பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள 2022க்குள் அனைவருக்கும் வீடு திட்டம், நாட்டின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு உதவும் ரியல் எஸ்டேட் துறையில் விரைவான தாக்கம் ஆகிய விஷயங்களைக் கவனத்தில் கொண்டு ஒரு புதிய கொள்கை வகுப்பட உதவும் வகையிலான திட்டம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்றும் அந்த அமைப்பு கருத்துத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்த அமைப்பின் தலைவர் சேகர் ரெட்டி பேசும்போது, நிலங்களின் அதிகப்படியான விலை, கூலி, கட்டுமானப் பொருள்கள் போன்றவற்றாலான அதிக செலவு, நிதிச் சுமை, வரிச் சுமை, கடந்த சில மாதங்களாகக் காணப்படும் மந்தமான வீட்டுத் தேவை போன்றவற்றால் ரியல் எஸ்டேட் துறை தத்தளித்துக்கொண்டிருப்பதாகக் கூறினார்.
மேலும், வீட்டுக் கடன் வட்டி விகிதம் குறைக்கப்படும் என்றும் இதனால் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் இத்துறையின் நிதி வரத்து அதிகமாகும் என்றும் ரியல் எஸ்டேட் துறையினர் நினைத்துக்கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து நான்காவது முறையாக ரிசர்வ் வங்கி இது போல் நிதிக்கொள்கையை மாற்றாமல் தொடர்ந்து செல்கிறது எனவும், எதிர்பார்க்கும் அளவிலான பணவீக்கம் உருவாகாதவரை அது வட்டி விகிதத்தைக் குறைக்கப்போவதில்லை எனவும் அந்த அமைப்பு வருத்தம் தெரிவிக்கிறது.
ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் வீடு வாங்குவோருக்கும் ரியல் எஸ்டேட் துறையினருக்கும் இந்தத் தீபாவளிக் கொண்டாட்ட சமயத்தில் அதிர்ச்சியே கிடைத்துள்ளது என அவர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் அதே நேரத்தில் சிபிஆர்ஈ நிறுவனத்தின் தெற்காசிய பிராந்தியத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநரான அனுஷ்மன் மகஜின் பேசும்போது, ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை எதிர்பார்த்த ஒன்று தான் எனத் தெரிவித்துள்ளார்.
பணவீக்கத்திலான அழுத்தத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைப்பது, உற்பத்தி, கட்டுமானம், சேவை போன்ற துறைகளின் செயல்திறனை மேம்படுத்துவது போன்றவை அடுத்த அரையாண்டில் பொருளாதார மேம்பாட்டுக்கான அறிகுறிகளாக உள்ளன என்றும் மகஜின் கூறியுள்ளார்.
மேலும் வரும் மாதங்களில் ரிசர்வ் வங்கி கடன் வழங்கும் அடிப்படைத் தொகையின் வரம்பைக் குறைத்தால் அது ரியல் எஸ்டேட் துறைக்கு நன்மை தருவதாக அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இத்தகைய நடவடிக்கையை ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும்போது, ரியல் எஸ்டேட் துறை தனது சரிவிலிருந்து மேம்படும் என அத்துறையினர் நம்புகின்றனர். ஏனெனில் வீட்டுக் கடன் மீதான அதிக வட்டி வீதத்தாலும் வீடுகளின் விலை அதிகரித்திருப்பதாலும் கடந்த சில ஆண்டுகளாக வீடுகளுக்கான கிராக்கி தொடர்ந்து குறைந்து வருகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள்.
ஆகவே ரிசர்வ் வங்கி தன் கடன் வழங்கும் அடிப்படைத் தொகை வரம்பை குறைத்து ரியல் எஸ்டேட் துறைக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்னும் பெரிய எதிர்பார்ப்பு அத்துறையினரிடையே நிலவி வருகிறது என்பதே உண்மை.