வீட்டுக் கடன்: நீண்ட காலம் செலுத்தும் இ.எம்.ஐ. லாபமா?

loan_2588273fவீடு வாங்கும்போது கையில் சல்லிக்காசு கூட இல்லை’ – வீடு வாங்கிய பலரும் இப்படிப் பேசக் கேட்டிருப்பீர்கள். அப்புறம் எப்படி வீடு வாங்கியிருப்பார்கள்? வங்கிகள், வீட்டுக் கடன் வசதி நிறுவனங்கள் தரும் கடன் மூலமே வீட்டை வாங்கியிருப்பார்கள். கடன் வாங்கி வீடு வாங்கியது சரி, கடனை எப்போது அடைப்பது? இ.எம்.ஐ.யை அடைக்க 20 அல்லது 25 ஆண்டுகள் எடுத்துக்கொள்வது யாருக்கு லாபம்?

இன்று வங்கிகள் போட்டிப்போட்டுக் கொண்டு வட்டிக் குறைப்பு செய்கிறார்கள். வங்கிகள் கேட்கும் ஆவணங்கள் அனைத்தும் இருந்தால் வீட்டுக் கடனை எளிதாக வாங்கிவிடலாம். இப்போதெல்லாம் வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் 25, 30 ஆண்டுகளுக்குக்கூடச் சில வங்கிகள் வழங்குகின்றன. இப்படி நீண்ட காலத்துக்கு வீட்டுக் கடன் வாங்கும்போது அதில் சாதகம், பாதகம் என இரண்டுமே இருக்கின்றன.

பாதகம் என்ன?

முதலில் பாதகமான அம்சங்களைப் பார்ப்போமா? வீட்டுக் கடனில் உள்ள பெரிய சிக்கல் என்றால், அதிக அளவில் செலுத்தப்படும் வட்டிதான். உதாரணத்துக்கு ஒருவர் 25 ஆண்டுகளுக்கு 9.90 சதவீத வட்டியில் 21 லட்சம் ரூபாய் வீட்டுக்கடன் வாங்குகிறார் என வைத்துக்கொள்வோம். அவருக்கான இ.எம்.ஐ. மாதந்தோறும் 18,935 ரூபாய். அவர் 25 ஆண்டுகளும் இ.எம்.ஐ. செலுத்துகிறார் என்றால் அவர் வங்கிக்கு முழுவதும் கட்டும் தொகை 56,80,500 ரூபாய். இதில் அசல் தொகையான 21 லட்சத்தைக் கழித்துவிடுங்கள். அப்படியானால் 25 ஆண்டுகளுக்குச் செலுத்தப்படும் வட்டி மட்டுமே 35,80,500 ரூபாய். அதாவது அந்த நபர் வாங்கிய கடனை விட வட்டி மட்டுமே ஒன்னேமுக்கால் மடங்கு அதிகம்.

வீட்டுக்கடனை நீண்டகாலத்துக்குக் கட்டும்போது வட்டி விகிதம் உயர்வு ஆபத்து தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். அதாவது, 9.90 சதவீதத்தில் கடன் வாங்கியிருப்பீர்கள். பணவீக்கம், பொருளாதார நிலையைக் காரணம் காட்டி வட்டி விகிதம் இடையிடையே உயரவும் வாய்ப்புகள் உள்ளன. அப்படி வட்டி விகிதம் உயரும்போது செலுத்தப்படும் இ.எம்.ஐ. தொகை கூடுதலாகிவிடும். அல்லது கடனைத் திரும்பச் செலுத்தும் காலத்தை மேலும் நீட்டிக்கவேண்டியிருக்கும். இந்த ஆபத்து எப்போதும் இருக்கும்.

கடனை அடைக்க வழி

கூடுதல் வட்டி செலுத்துவதிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் சில வழிமுறைகளும் உள்ளன. வீட்டுக் கடனை 25 ஆண்டுகளுக்கு வாங்கியிருந்தாலும், கையில் பணம் கிடைக்கும்போதெல்லாம் அதைக் கொண்டு கடனை அடைத்துக் கொண்டே வரலாம். இதன்மூலம் கடன் காலத்தைக் குறைத்துக்கொள்ளவும் செய்யலாம். வருமான வரி, குறைந்த மாதத் தவணை எனச் சில சலுகைகளுக்காகக் கடனைப் பல ஆண்டுகளுக்குக் கட்டுவதை விட்டுவிட்டு விரைவில் முடிப்பதே நல்லது. இதன்மூலம் நீங்கள் செலுத்தி வந்த இ.எம்.ஐ. சேமிப்பாக மாறவும், அந்தப் பணத்தை வேறு முதலீடுகள் செய்யவும் வாய்ப்பு ஏற்படும்.

Leave a Reply